×

65 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை குறைவு

திருமலை: உலகப்பிரசித்தி பெற்ற பூலோக வைகுண்டமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும். இதில், சாதாரண நாட்களில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள், வார விடுமுறை மற்றும்  உற்சவ நாட்களில் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இவ்வாறு தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக தினமும் ரூ2 கோடி முதல் ரூ4 கோடி வரை காணிக்கையாக செலுத்தி வந்தனர். தற்ேபாது கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 80 நாட்களாக பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு பின்னர் கடந்த ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அர்ச்சகர்கள், ஊழியர்கள் உட்பட 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த  3000 இலவச தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்தது. ரூ300 தரிசன  டிக்கெட்டை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி 9000 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 ஆயிரத்து 805 பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் உண்டியலில் ரூ3.24 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை 4250 பேர் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ40 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1955ம் ஆண்டுக்கு முன்னர் மிக குறைந்தளவு பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பின்னர் படிப்படியாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தற்போது கொரோனாவால் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 1955-2020ம் ஆண்டு கால கட்டங்களான கடந்த 65 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை தற்போதுதான் குறைந்துள்ளது என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்

Tags : devotees ,Ezhumalayan , Ezhumalayan Temple, less visited by devotees
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...