×

பொருளாதாரத்தை காரணம் காட்டி ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது...! மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: பொருளாதார சரிவை சமாளிப்பதை மட்டும் கருத்தில் கொண்டு, ஊரடங்கை முழுமையாக தளர்த்தும் முடிவை எடுக்க முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டும் என தான் கூறமுடியாது என்றும், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு கட்டமாக நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஊரடங்கை தளர்த்த முடியாது என்றும், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தி விட்டு, தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘நிறைய பேர் ஊரடங்கை எதிர்க்கிறார்கள். ஊரடங்கு பொருளாதாரத்தை பாதிப்பதாக கூறுகிறார்கள். அவர்களுக்காக ஊரடங்கை முழுமையாக நீக்க தயார் என நான் கூறுகிறேன். அந்த முடிவால் கொரோனா பரவல் அதிகமாகி மக்கள் உயிரிழந்தால், அதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா? எங்களுக்கும் பொருளாதாரத்தை நினைத்து கவலை இருக்கிறது. அனைத்து நடவடிக்கைகளும் எச்சரிக்கையுடன் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

அரசியல் சவால்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனது வேலையில் நான் நேர்மையாக இருக்கிறேன். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று, மகாராஷ்டிர முதல்வரை நாட்டின் சிறந்த முதல்வராக அடையாளப்படுத்தியது. இது பலருக்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது. மும்பை நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என்றார். மேலும், கொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை மகாராஷ்டிர அரசு மறைத்து விட்டதாக எழும் விமர்சனங்களுக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags : Uttam Thackeray ,Maratha , Economic, Curfew, Maratha Chief Minister, Uttam Thackeray
× RELATED மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்...