×

மயிலாடும்பாறையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

வருசநாடு: மயிலாடும்பாறையில் சேதமடைந்த நிலையில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை புதிதாக கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறையில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை வாங்குவதற்காக தினசரி கிராம நிர்வாக அலுவலகம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து பேச வரும் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

மேலும், ஆவணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, அலுவலகத்திற்கு புதிய கட்டி தருவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கிராமத்தை சேர்ந்த அறிவழகன் கூறுகையில், ‘மயிலாடும்பாறை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பழைய கிராம அலுவலகக் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய அலுவலகம் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பில்லாமல் அழிந்து விடும். இது குறித்து தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Mayiladuthurai , Mayiladuthurai, Village Administration Office Building, Damage
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...