×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்: பொதுமக்கள் அதிருப்தி

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றிய ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யும் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் அரிசி பழுப்பு, கருப்பு நிறங்களில் தரமற்று இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர். இதை சாப்பிட முடியவில்லை என விற்பனையாளரிடமும், உயரதிகாரியிடமும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாக புழுங்கல் அரிசி, பச்சரிசி, குண்டு அரிசி என பிரித்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி ரேஷன் கடையில் நேற்று முன்தினம் விநியோகம் செய்யப்பட்ட புழுங்கல் அரிசி, பச்சரிசி, குண்டு அரிசி ஆகியவை தரமற்று இருந்ததால், ரேஷன் கடை ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கடமலைக்குண்டு போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கூறுகையில், ‘ரேஷன் கடையில் தரமான புழுங்கல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் கடை தேவையில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இது குறித்து விற்பனையாளர் கூறுகையில், ‘ரேஷன் கடைக்கு அரசு வழங்கும் அரிசியை விநியோகம் செய்கிறோம்’ என்றார்.


Tags : Katamalai-Mayilai Union: Public , Katamalai-Mayilai, substandard ration rice, distribution
× RELATED தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை!