×

இருக்கைகள், சிற்பங்கள், வை-பை வசதியுடன் சர்வதேச தரத்தில் பொலிவு பெறுகிறது கன்னியாகுமரி: சுற்றுலா மேம்பாட்டு பணி தீவிரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை ரூ.9 கோடி செலவில் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற  சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு முக்கடல் சங்கமம்,  சூரிய உதயம், மறைவை ஒரே இடத்தில் காணும் வசதி ஆகியவற்றை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆராய்ச்சியாளர்களும்  வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவே உள்ள 133  அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டம் ஆகிய இடங்களை படகில் சென்று பார்க்கின்றனர்.

காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம், வியூ  டவர், சன்செட் பாயின்ட் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்கின்றனர். அதோடு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மனை தரிசிப்பதற்காகவும் ஏராளமான  பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா வருகின்றனர் .உலகளவில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி கடற்கரை சேதமடைந்து படுமோசமாக காணப்பட்டது. பாதுகாப்பற்ற நிலையை அறியாத பலர் அலையால் இழுத்து செல்லப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வந்தது. இதேபோல் சூரிய உதயத்தை பார்க்கும் கிழக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு வசதிகள் இல்லாத நிலை இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.

இதனால் சுற்றுலாவுக்கு இருந்த வரவேற்பு குறையத்தொடங்கியது. எனவே சுற்றுலா பயணி களை அதிகளவில் ஈர்க்கவும், கன்னியாகுமரியின் அழகை உலகளவில் கொண்டு செல்லும் வகையிலும் முக்கடல் சங்கமம் கடற்கரையை சீரமைக்க வேண்டும் என்று சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மத்திய அரசு குமரி முனையை சீரமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் கிழக்கு  பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து சூரிய உதயத்தை ரசிக்கும் வகையில்  இருக்கைகள் போன்ற அமைப்புகளை உருவாக்குவது, முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடுவதற்கு வசதியாக கருங்கற்களால் ஆன படிக்கட்டுகள்  கட்டுவது,

சுற்றுலா பயணிகள் கடல் அலையை அமைதியாக அமர்ந்து ரசிப்பதற்காக  காட்சி கூடம்,  தடுப்பு சுவர் பகுதியில் கருங்கல் சிற்பங்கள் அமைப்பது, கடற்கரை பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, இலவச வை-பை வசதி,  குடிநீர் வசதி, ஆம்பிதியேட்டர், குளியல் மற்றும் உடை மாற்றும் அறை உள்பட  பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது  70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் முழு வீச்சல் நடந்து  வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இடையூறுகள் இன்றி சீரமைப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்து சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வர தடை நீக்கிய பின்னர், சுற்றுலா பயணிகள் இங்கு வரும்போது கன்னியா குமரி சர்வதேச தரத்தில் புது  பொலிவுடன் காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காந்தி, காமராஜர் மண்டபங்கள் சீரமைப்பு
கன்னியாகுமரி  காமராஜர் மணி மண்டபம் பராமரிப்பின்றி பல இடங்கள் சிதிலமடைந்து  காணப்பட்டது. இதை செப்பனிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை  விடுத்தனர். இதையடுத்து தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் காந்தி  மண்டபம் மற்றும் காமராஜர் மணி மண்டபம் ரூ.40 லட்சம் செலவில்  சீரமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்படி இடிந்து கிடந்த  மணிமண்டபத்தின் சுற்றுசுவர் சீரமைக்கப்பட்டது. மேலும் வர்ணம் தீட்டும் பணி முடிவடைந்துள்ளது. இதனால் காந்தி மண்டபமும், காமராஜர் மணி மண்டபமும்  புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தற்போது உள்பகுதியில் மராமத்து பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Kanyakumari ,facilities , Seats, sculptures, Wi-Fi facility, Kanyakumari
× RELATED கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர்...