×

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ2 கோடி செம்மரக்கட்டை கடத்திய ஜவ்வாதுமலையை சேர்ந்த 2 பேர் கைது

திருமலை: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ரூ2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டை கடத்திய ஜவ்வாதுமலையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சித்தூர் மாவட்டம், திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய ஆர்எஸ்ஐ வாசு தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து நேற்றுமுன்தினம் இரவு முதல் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சீனிவாசமங்காபுரம் அருகே  வனப்பகுதியை ஒட்டியுள்ள ரயில்வே பாலம் அருகே சென்றபோது சேஷாசல வனப்பகுதியில் இருந்து 40க்கும் மேற்பட்டோர் செம்மரக்கட்டைகளை தோளில் சுமந்தபடி வருவதை பார்த்தனர்.

தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளை ஆங்காங்கே வீசிவிட்டு கொட்டும் மழையில் தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் விரட்டிச்சென்றதில் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரபு ஆகிய 2 பேரை கைது செய்து அந்த பகுதியில் இருந்த ₹2 கோடி மதிப்புள்ள 44 செம்மரக்கட்டைகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அதிரடிப்படை எஸ்பி ரவிசங்கர் கூறியதாவது: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடத்தல்காரர்கள் லாரிகளில் தொடர்ந்து செம்மரம் வெட்டுவதற்காக கூலி தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர்.

 அவ்வாறு கடந்தவாரம் ஜவ்வாது மலையில் இருந்து இரண்டு குழுக்களாக லாரியில் கடத்தல்காரர்கள் 40க்கும் மேற்பட்டோரை ஜவ்வாது மலையில் இருந்து அசோக் என்பவர் அழைத்துவந்து வனப்பகுதியில் ஏற்கனவே வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை கடத்தலுக்காக வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தபோது போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட பிரபு ஏற்கனவே வன அதிகாரிகள் ஸ்ரீதர்,  டேவிட் கருணாகர் கொலை வழக்கில் குற்றவாளியாக சிறைக்கு சென்றவர். சுரேஷ் மீது பாக்ராபேட்டை வனத்துறை அலுவலகத்தில் செம்மரக்கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : persons ,forest ,Tirupati Seshachalam , Two arrested for smuggling Rs 2 crore worth of sheep in Tirupati Seshachalam forest
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...