×

கீழடி அகழாய்வில் 6 சிறிய வட்ட துளைகள் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் தோண்டியது எதற்காக?

திருப்புவனம்: கீழடி அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தோண்டிய வட்டவடிவ சிறிய துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கதிரேசன், சேதுராமு ஆகியோரது நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் நடக்கின்றன. இதில் ஒரு குழியில் நேற்று சிறிய வகை மண் பாத்திரங்கள் கண்டறியப்பட்டன. மற்றொரு குழியில் வளைவான செங்கல் கட்டுமானம் இருந்தது. அதன் அருகிலேயே 6 அடி ஆழத்தில் வளைவான அமைப்பில் 6 சிறிய வட்ட வடிவ துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த துளைகளின் பயன்பாடு குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் வட்ட வடிவில் அமைந்திருக்கின்றன.

மூங்கில் கழிகள், மரக்குச்சிகளை வட்ட வடிவில் நட்டு அதன்மேல் கூரை வேய்ந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக 5ம் கட்ட அகழாய்வில் மேற்கூரை அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது மூங்கில் கழிகள் நடுவதற்கு பயன்படுத்திய வட்டவடிவ துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது ஒரு பகுதி மட்டுமே வெளிப்பட்டுள்ளது. அகழாய்வை வடக்கு பகுதியில் தொடங்கும்போது கூடுதல் துளைகள் கிடைக்க வாய்ப்புண்டு’’ என்று தெரிவித்தனர். அகழாய்வுக்காக கீழடியில் மொத்தம் 12 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கூடுதல் குழிகளில் அகழாய்வு மேற்கொள்ள நில அளவை பணிகள் நடந்து வருகின்றன.

Tags : Bottom excavation, discovery of circular holes
× RELATED 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை...