திருவில்லிபுத்தூர்: ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க தேரோட்டம், வரலாற்றில் முதல்முறையாக பக்தர்களின்றி கோயில் வளாகத்திற்குள் நடைபெற்றது. ஆண்டாள் பிறந்த தினமான ஆடி பூரத்தன்று, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் வளாகத்திலேயே தேரோட்டத்தை நடத்த அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நேற்று காலை 8.05 மணிக்கு கோயில் வளாகத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாளும், ரங்கமன்னாரும் அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் தேரில் கொண்டு வரப்பட்டனர். பின்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து `கோவிந்தா, கோபாலா’ என கோஷம் எழுப்பியபடியே தங்கத்தேர் இழுக்கப்பட்டது. விழாவில் விருதுநகர் கலெக்டர் கண்ணன், ஐஜி முருகன், இணை ஆணையர் தனபால், மணவாள மாமுனிகள் மட ஜீயர், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா மற்றும் அரசு அதிகா ரிகள் கலந்து கொண்டனர். எப்போதும் திறந்தவெளியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம், கோயில் வரலாற்றில் முதல் முறையாக நேற்று குறைந்த அளவிலான நபர்களுடன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் செய்திருந்தனர். காலை 8.05 மணிக்கு துவங்கிய தேரோட்டம் 8.25 மணிக்குள் நிறைவடைந்தது.