×

கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் நிலக்கடலை விதைப்பு பணி துவக்கம்: இடுபொருட்கள் மானியத்துடன் வழங்கப்படுமா?

கோவில்பட்டி: கோவில்பட்டி,  எட்டயபுரம் பகுதியில் நிலக்கடலை சாகுபடிக்கான  விதைப்பு பணிகளை விவசாயிகள் துவங்கி உள்ளனர். எனவே, இடுபொருட்கள் மானியத்துடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். குறிப்பாக கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப தங்களது செம்மண் நிலங்களை உழுது பண்படுத்தி உரமிட்டு தயார்படுத்தி வந்தனர். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு  அமலுக்கு வந்ததால் எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் பருவ காலங்களான காரீப்பருவம் முடிந்து ராபி பருவம் துவங்க உள்ளதை அடுத்து கோவில்பட்டி, எட்டயபுரம், பசுவந்தனை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் செவல்மண் நிலங்களை உழுது நிலக்கடலை, துவரை விதைகளை விதைக்க துவங்கியுள்ளனர். விவசாய கூலித்தொழிலாளர்களை கொண்டு நிலக்கடலை விதைப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இருப்பினும் ஒரு சில விவசாயிகள் டிராக்டர் மூலம்  நிலக்கடலை விதைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களாக எந்தவொரு வருவாயும் இன்றி முடங்கியுள்ள விவசாயிகள், ஏற்கனவே கடந்த ஆண்டு விளைந்த மகசூலுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் இருப்பு வைத்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது நிலக்கடலை  விதைப்பு பருவம் துவக்கியுள்ளதோடு, வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து இதர விதைப்புகளான உளுந்து, பாசி, மக்காச்சோளம், பருத்தி, கம்பு  போன்ற பயிர்களுக்கான விதைப்பு பணிகளை துவங்கும் நிலை உள்ளது. எனவே, கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் எதிர்வரும் பருவ ஆண்டை எப்படி எதிர்கொள்வது என தெரியாத நிலையில் உள்ளதால் விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து வேளாண் இடுபொருட்களையும் முழு மானியத்தில் அரசு வழங்குமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கிடப்பில் கிடக்கும் நிலுவைத்தொகை
கடந்த 2019-20ம் ஆண்டில் உளுந்து பாசி பயறு விளைச்சலானது அதிக மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. உரிய நிவாரணம்  வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்குவதாக  உளுந்து,  பாசி பயிரிட்ட விவசாயிகளிடம் இருந்து பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகள், ஆதார் அட்டைநகல், வங்கி கணக்கு நகல் பெறப்பட்டது. இந்நிலையில் கொரோனா  எதிரொலியாக நிவாரணம் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உளுந்து, பாசிப்பயறு பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குறிப்பாக கடந்த 2019-20ம் ஆண்டிற்கான பயிர்  காப்பீடு இழப்பீடு தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Commencement ,Kovilpatti ,Ettayapuram ,area , Kovilpatti, Ettayapuram, Groundnut sowing, work
× RELATED எட்டயபுரம் அருகே லாரி ஏற்றி மாமனார்...