×

4 மாதங்களுக்கு பின்னர் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டியது: சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடியது

உடுமலை,: 4 மாதங்களுக்கு பிறகு பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டுகின்றபோதும், குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் இல்லாமல் அருவி வெறிச்சோடுகிறது. உடுமலை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். கோடை காலம் தவிர்த்து பிற மாதங்களில் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். திருமூர்த்தி மலை, திருமூர்த்தி அணை மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தண்ணீர் வரத்தின்றி அருவி வெறும் பாறையாக காட்சி அளித்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது.

இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வண்டியாறு, கிழவன்ஆறு, கொட்டைஆறு, குருமலை ஆறு, மேல்குறுமலை, கீழ்குறுமலை ஆறு, தோணி ஆறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரிக்கவே பஞ்சலிங்க அருவியிலும் தண்ணீர் ரம்மியமாக கொட்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 மாதமாக சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், 4 மாதத்திற்கு பிறகு தண்ணீர் கொட்டியபோதும், குளிப்பதற்கு ஆட்களின்றி அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. அருவியில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றி பாலாறாக ஓடுகிறது. இதிலிருந்து அர்ச்சகர்கள் தண்ணீர் எடுத்து கோயிலில் உள்ள சாமிகளுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.

Tags : Panchalinga Falls, pouring water
× RELATED சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்துள்ள...