×

பஸ் மோதி உயிரிழந்த மருத்துவ மாணவனின் தாய்க்கு ரூ41.8 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பஸ் மோதியதில் உயிரிழந்த மருத்துவ மாணவனின் தாய்க்கு, ₹41.8 லட்சம்  இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரீத்தம் (20). எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2017 அக்டோபர் மாதம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செட்டியார்பேட்டை அருகே சென்றபோது, அதி வேகமாக வந்த பஸ் எந்த சிக்னலும் கொடுக்காமல் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றது. இதை சற்றும் எதிர்பாக்காத பிரீத்தம் ஓட்டி வந்த பைக், பஸ் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனால் தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது தாய் மனோன்மணி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.உமாமகேஸ்வரி முன்னிலையில் நடந்தது. விசாரணையில், மனுதாரரின் மகன் இறப்புக்கு அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் பஸ்சை இயக்கியதே காரணம் என தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ₹41.80 லட்சம் பியூச்சர் ஜெனரல் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : student , Bus, medical student, compensation, court
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...