×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே தொழிற்சாலை விரிவாக்க பணிக்கு அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே தனியார் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய அனுமதி மறுத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் சன் பார்மா என்ற தனியார் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக சன் பார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சக ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய கடந்த மாதம் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. சரணாலயம் அமைந்திருக்கும்  பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே 5 கி.மீ என்ற சுற்றுப்பரப்பளவை 3 கி.மீட்டராக குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது, என்று கூறப்பட்டுள்ளது. இதை கேட்ட நீதிபதிகள், வேடந்தாங்கல் நிலப்பரப்பு குறைக்கப்படுவதற்கு எதிராக மனுதாரர் மத்திய அரசிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Vedanthangal Bird Sanctuary ,Government of Tamil Nadu , Vedanthangal Bird Sanctuary, Factory, Denial of Permission, ICC, Government of Tamil Nadu
× RELATED கோயில்களில் திருமணத்துக்கு அனுமதி மறுப்பு; பக்தர்கள் கொதிப்பு