×

அரிசி கடத்தலுக்கு உதவிய ரேஷன் கடை ஊழியர்கள் 7 பேர் சிறையில் அடைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

அண்ணாநகர்: அமைந்தகரையில் இருந்து  ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 88 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தலுக்கு உதவிய ரேஷன் கடை ஊழியர்கள் 7 பேரை கைது செய்தனர். சென்னை அமைந்தகரை, அரும்பாக்கம், சிந்தாமணி நகர், ஷெனாய் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியை கடை ஊழியர்கள் பதுக்கி, கள்ளச்சந்தையில் விற்பதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அமைந்தகரை பாரதிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக ரேசன் அரிசியை வாகனங்களில் ஏற்றி, ஆந்திராவுக்கு கடத்த முயற்சிப்பதாக நேற்று முன்தினம் அண்ணாநகர் துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, அங்கு ஒரு ஆட்டோ மற்றும் வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு, புறப்பட தயார் நிலையில் இருந்தது. அவற்றை மடக்கி பிடித்த அதிகாரிகள், அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்தனர்.

இதில், 4,400 கிலோ எடை கொண்ட 88 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்த ரமேஷ் (28) என்பவரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 ஆட்டோ, ஒரு வேனை பறிமுதல் செய்தனர். இதுபற்றி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு ஆய்வாளர் தயாளனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவரிடம் பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை ஒப்படைத்தனர். விசாரணையில்,  அங்குள்ள 7 ரேஷன் கடை ஊழியர்களின் உதவியுடன் அரிசியை பதுக்கி, ஆந்திர மாநிலத்துக்கு வாகனங்களில் கடத்த இருந்ததாக ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 7 ரேஷன் கடைகளில் ஆய்வாளர் தயாளன் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, கடை ஊழியர்களான பாபு (50), சேகர் (51), தயாளன் (36), விக்னேஷ்வரன் (24), நரசிங்கப்பெருமாள் (38), காசிம் (32), முத்துகுமார் (33) ஆகிய 7 பேர் ரேஷன் அரிசி கடத்துவதற்கு உதவியாக இருந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : ration shop employees ,ration shop staff , Rice smuggling, ration shop staff, jail closures
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை சங்கத்தினர் மனு