×

நில புரோக்கர் கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் கைது: பரபரப்பு வாக்குமூலம்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு மேட்டு தெருவை சேர்ந்த நில புரோக்கர் வீரமணி (46) என்பவர், கடந்த 22ம் தேதி, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், அம்பத்தூர் அடுத்த வானகரம் போரூர் கார்டனை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், சமாஜ்வாதி கட்சியின் தமிழ் மாநில தலைவருமான லோகநாதன் யாதவ் (40) என்பவர், கூலிப்படையை வைத்து வீரமணியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, லோகநாதன் யாதவ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த தண்டலம் ஆகாஷ் நகரை  சேர்ந்த சரவணன் (எ) முருகன் (44), வில்லிவாக்கம், சன்னதி தெருவை சார்ந்த தீனதயாளன் (39), பெரம்பூர் ஜமாலியாவை சார்ந்த பிரபல ரவுடி பிரேம்குமார் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

லோகநாதன் யாதவ் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியது: வீரமணியுடன் சேர்ந்து லோகநாதன் கடந்த பல ஆண்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இதனிடையே, அம்பத்தூர் சி.டி.எச் சாலையில் பல ஆண்டாக மூடிக்கிடக்கும் தனியார் டயர் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் பலருக்கு லோகநாதன் விற்று வந்துள்ளார். இதற்கு, வீரமணியும், அவரது நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். சமீபத்தில், லோகநாதனை விட்டு வீரமணியும், அவரது நண்பர்களும் பிரிந்து தனியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். அப்போது, லோகநாதன் மடக்கி வைத்திருந்த தனியார் தொழிற்சாலை நிலத்தை சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த ஒரு டாக்டருக்கு வீரமணி விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளார்.

அதற்காக பல லட்சங்களை முன் தொகையாக பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன் கூலிப்படையை வைத்து வீரமணியை கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய கார், ஆட்டோக்கள், கத்திகள் மற்றும் கூலி படைக்கு கொடுத்த ரூ.2 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.

Tags : state leader ,Samajwadi Party , Land broker, Samajwadi Party state leader, arrested
× RELATED விவசாய கடன் தள்ளுபடி: சமாஜ்வாடி தேர்தல் அறிக்கையில் உறுதி