ஹூஸ்டன் தூதரகத்தை மூட சொன்னதால் ஆத்திரம்; அமெரிக்காவுக்கு சீனா பதிலடி: செங்டு தூதரகத்தை மூட உத்தரவு

பீஜிங்: ஹூஸ்டனில் சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்ட நிலையில், அதற்கு பதிலடியாக செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள சீன துணை தூதரகத்தை மூடுமாறு அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. அதோடு சில சீன நிறுவனங்களையும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனா, தனது நாட்டின் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடுமாறு  நேற்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘செங்டுவில் அமெரிக்க துணைத் தூதரகத்தை அமைப்பதற்கும், தொடர்ந்து அது செயல்படுவதற்குமான ஒப்புதலை வாபஸ் பெறப்படுகிறது. எனவே, அமெரிக்கா தனது தூதரகத்தை மூட வேண்டும். இது, அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான முடிவுக்கும், நியாயமற்ற செயலுக்கும் தேவையான பதிலாகும். அமெரிக்கா தவறான தனது முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இருதரப்பு உறவை மீண்டும் மேம்படுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் தொடங்கியதில் இருந்தே பல்வேறு விஷயங்களில் மோதல் நிலவி வருகிறது.

கொரோனா வைரசை சீனா தான் பரப்பியதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதோடு, கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பு ஆய்வு முடிவுகளை சீனா திருடுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இதன் காரணமாகவே சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

உளவுப் பார்த்த சீன வீரர்கள் கைது

சீன ராணுவத்தில் பணிபுரிவதை மறைத்து ஆராய்ச்சிப் பணிக்காக அமெரிக்கா வந்ததாக விசா மோசடி செய்ததாக 4 பேரை அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்பிஐ பிடித்துள்ளது. இதுபோன்ற சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி, விசாரணை மேற்கொண்டதில் 3 பேர் சிக்கியதாகவும், மற்றொருவர் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள சீன தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறையும், ரூ.18.5 கோடி அபராதமும் விதிக்கப்படும். சீன ராணுவத்திற்காக இவர்கள் உளவு பார்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories:

>