×

வாகன வசதி இல்லாததால் ஒரே இடத்தில் 50 சடலங்கள் தகனம்: தெலங்கானாவில் மேலும் ஒரு கொரோனா அவலம்

திருமலை: ஐதராபாத்தில் போதிய வாகன வசதி இல்லாததால் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டதாக மருத்துவத்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ சீத்தக்கா தனது டிவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்து இறந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டது. இது குறித்து சீத்தக்கா கூறுகையில், ‘‘கொரோனாவால் இறப்பவர்களின் மரணங்கள் மோசமாக இருப்பதை காட்டிலும் இந்த வீடியோவை பார்த்தால் மேலும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

உலக நாடுகளில் இது போன்ற மிக மோசமான நிலையில், இவ்வளவு சடலங்கள் ஒரே நேரத்தில் எரிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே,’’ என்றார். மாநில மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் ரமேஷ் கூறுகையில், ‘‘தெலங்கானாவில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  இறந்தனர். இதனால், இந்த சடலங்களை தனித் தனியாக கொண்டு செல்ல போதிய வாகன வசதி இல்லாததால் அனைத்து சடலமும் ஐதராபாத் இஎஸ்ஐ மயானத்திற்கு  கொண்டு செல்லப்பட்டு ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது,’’ என்றார்.

மிகவும் மோசம்
தெலங்கானாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. இம்மாநிலத்தில் இந்த நோய் தாக்கிய நோயாளிகள், மாட்டு வண்டியிலும், ரிக்ஷாக்களிலும், டிராக்டர்களிலும் எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் பரிதாப புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : corona tragedy ,vehicle facilities ,Telangana. , Vehicle facility, cremation of corpses, Telangana, Corona tragedy
× RELATED கார்கள் மோதல்: 3 பேர் பலி