×

இந்தியாவின் பொருளாதார சீர்த்திருத்த தந்தை நரசிம்மராவ் தான்: மன்மோகன் சிங் புகழாரம்

புதுடெல்லி: ‘நரசிம்மராவ் மண்ணின் மகத்தான மைந்தன். தொலைநோக்கு பார்வை, அதை நோக்கி பயணிக்கும் தைரியம் இரண்டையும் கொண்டிருந்ததால் உண்மையிலேயே அவரை இந்திய பொருளாதார சீர்த்திருத்தங்களின் தந்தை என்று அழைக்கலாம்’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புகழ்ந்துள்ளார். தெலங்கானா மாநில காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: கடந்த 1991ம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் நவீன இந்தியாவின் அஸ்திவாரத்தையும்,

நாட்டில் பொருளாதார சீர்த்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான பாதையையும் வகுத்தது என பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. 1991 பட்ஜெட் பொருளாதார சீர்த்திருத்தங்கள் மற்றும் தாராளமயமாக்கலில் இந்தியாவை பல வழிகளில் மாற்றியது.
அது ஒரு கடினமான முடிவு, அதோடு தைரியமான முடிவு. அத்தகைய முடிவு சாத்தியமானதற்கு காரணம் பிரதமராக நரசிம்மராவ் இருந்ததால்தான்.  அந்த நேரத்தில் பொருளாதாரத்திற்கான தேவை என்னவென்பதை முழுமையாக புரிந்து கொண்ட அவர், அதற்கான முழு சுதந்திரத்தை நிதி அமைச்சராக இருந்த எனக்கு அளித்தார்.

சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான தொலைநோக்கு மற்றும் தைரியம் கொண்ட மனிதருக்கு எனது தாழ்மையான மரியாதை செலுத்துகிறேன். அவர் இந்த மண்ணின் மகத்தான மைந்தன். இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்று, நரசிம்மராவை புகழ்ந்து பேசினர்.

Tags : Narasimha Rao ,Manmohan Singh ,India , India, Narasimha Rao, Manmohan Singh, Praise
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...