திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... மைக் டைசன் உற்சாகம்

கலிபோர்னியா: போட்டிகளில் இருந்து விலகி ஓய்வில் இருந்த பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் 15 ஆண்டுகளுக்கு பிறகு செப்.12ம் தேதி ரோய் ஜோன்ஸ் ஜூனியருடன் மோத உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த  பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (54). மிக இளம் வயதில் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்று (1986) சாதனை படைத்தவர். மேலும்19 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றுள்ளார். அதிலும்12 போட்டிகளில் முதல் சுற்றிலேயே வெற்றியை வசப்படுத்தி உள்ளார். டபிள்யூபிஏ, டபிள்யூசி, ஐபிஎப் பட்டங்களை வென்ற ஒரே ஹெவி வெயிட் சாம்பியன் என்ற பெருமைக்குரியவர்.

 பெயர் புகழ் மட்டுமல்ல கூடவே  சர்ச்சைக்கும் பஞ்சமில்லாதவர்! எதிராளியின் காதை கடித்தது, அதனால் தடை, கற்பழிப்பு புகார்... அதை தொடர்ந்து சிறை என பாக்சிங் ரிங்கை விடவும் செய்தி வளையத்திற்குள் அதிகம் வளைய வந்தவர்.  அதனால்  மன உளைச்சலுக்கும், கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகி தொடர்ச்சியாக அடுத்தடுத்து தோல்விகளை  சந்தித்தார். அதனால் போட்டிகளில் இருந்து 2005ம் ஆண்டு விலகினார் இந்நிலையில்,  ‘ஐ ஆம்  பேக்’என்ற வாசகத்துடன் செப்டம்பர் 12ம் தேதி ரோய் ஜோன்ஸ் ஜூனியருடன் மோதப்போகும் விவரங்களை ட்வீட் செய்துள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள ‘டிக்னிடி ஹெல்த் ஸ்போர்ட்ஸ் பார்க்’ அரங்கில் நடைபெறும் போட்டி மொத்தம் 8 சுற்றுகளாக நடைபெறும். எதிர்த்து களம் காணும் ரோய் ஜோன்ஸ் ஜூனியருக்கு 51வயது. தொடக்கத்தில் லைட் ஹெவிவெயிட், மிடில் ஹெவிவெயிட் பிரிவுகளில் பங்கேற்றவர், பின்னர் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் வென்று 106ஆண்டு கால குத்துச்சண்டை வரலாற்றில்  மகத்தான சாதனை படைத்துள்ளார் (2003). இதுவரை 75 முறை களமிறங்கி 47முறை நாக் அவுட் முறையில் வென்றவர். நடுவர் முடிவுகளின் அடிப்படையில் 19 முறை வென்றுள்ளார் (9 தோல்வி). கடைசியாக 2018ம் ஆண்டு  மோதிய போட்டியிலும் வெற்றி  வாகை சூடியுள்ளார்.

Related Stories: