×

பரிசோதனையின்போது வீடு இல்லாத மனநோயாளிகளிடம் அடையாள ஆவணம் கேட்காதீர்கள்: ஐசிஎம்ஆருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வீடு இல்லாத மனநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்போது வீட்டு முகவரி, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கேட்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்போது தனிநபரின் செல்போன் எண், அரசு அடையாள அட்டை, வீட்டு முகவரி சான்று உள்ளிட்டவற்றை அளிப்பது கட்டாயம் என கடந்த மாதம் 19ம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக வழக்கறிஞர் கவுரவ் குமார் பன்சால் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் டெல்லி அரசானது மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை குறித்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணையின்போது, மனநலம் பாதிக்கப்பட்ட வீடு இல்லாதவர்களின் நிலையை பரிசீலித்து செல்போன் எண், அரசு வெளியீட்டு அடையாள அட்டை மற்றும் வீட்டின் முகவரி ஆகியவற்றை கேட்காமல் கொரோனா சோதனை செய்ய முடியுமா என கேட்டிருந்தது.

இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பரிசோதனை செய்பவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானால், அவரை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கும், அவருடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காகவும் தான் செல்போன், அடையாள அட்டை, வீட்டின் முகவரி உள்ளிட்டவை கேட்கப்படுகிறது,” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டிஎன் படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமர்வு, ‘மனநிலை பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களிடம் அடையாள அட்டை,

செல்போன் எண் மற்றும் முகவரி ஆவணம் உள்ளிட்டவற்றை கேட்கக் கூடாது என சுற்றறிக்கை மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு மூலமாகவோ அறிவுறுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். ‘டெல்லி மற்றும் இதர இடங்களில் இதுபோன்ற நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்வதற்கான முகாம்கள் நடத்தப்பட வேண்டும். உங்களது அதிகாரங்களை மக்களுக்காக பயன்படுத்துங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் அனைத்து மாநிலங்களும் இதேபோல் செய்யும்,’ என்றும் நீதிமன்ற அமர்வு வலியுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வருகிற 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : examination ,homeless psychiatrists ,High Court ,ICMR ,Psychiatrist , Examination, Psychiatrist, ICMR, High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...