×

கபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம் விற்பனை செய்யும் அரசு டாம்ப்கால் மருந்து விற்பனை நிலையம் மூடியிருப்பது ஏன்?

* தனியார் மருந்துக் கடைகள் மூலம் கமிஷன் வருகிறதா?
* சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: கபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம் விற்பனை செய்யும் அரசு டாம்ப்கால் நிறுவனம் மருந்து விற்பனை நிலையத்தை மூடியிருப்பது ஏன், தனியார் மருந்துக் கடைகள் மூலம் கமிஷன் வருகிறதா  என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆயுஷ் துறை பரிந்துரை செய்த சுபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆடாதொடை மணப்பாகு மற்றும் ஓமியோபதியில் உள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மருந்துகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன் கூட்டியே வீடு வீடாக சென்று வழங்கியதையடுத்து நல்ல பலன் கிடைத்தது.

அதனால் சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியது. கபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்ற சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகளை உற்பத்தி செய்யும் அரசு டாம்ப்கால் நிறுவனம் ஆலத்தூரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட மருந்துகள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவமனைக்கு  ஒவ்ெவாரு மாதமும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் மருந்து விற்பனை நிலையம் உள்ளது.

இந்த மருந்து விற்பனை நிலையத்தில் கொரோனா பாதிப்புக்கு முன்பு ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினம் அங்குள்ள மருத்துவர்களை பார்த்து அவர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகளை வாங்கி சென்றனர். பொது மக்களும் தினமும் தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கி சென்றனர். தினமும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய கபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆடாதொடை மணப்பாகு போன்ற மருந்துகளை ஆயுஷ்துறை பரிந்துரை செய்ததையடுத்து இந்த கசாயத்தை வாங்கி சாப்பிட்டு கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வமுடன் மக்கள் வந்தால் அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு டாம்ப்கால் மருந்து விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடியே கிடக்கிறது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அங்குள்ள ஊழியர்கள் மற்றும் செக்யூரிட்டியிடம் மருந்தகம் எப்போது திறக்கப்படும் என்று கேட்டால் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. கபசுரக்குடிநீர் வேண்டுமானால் எதிரே உள்ள தனியார் மருந்துக் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளுங்கள். இந்த கடையில் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறி அனுப்பி விடுகின்றனர். மருந்து வாங்க வந்தவர்கள் அந்த தனியார் மருந்து கடைக்கு சென்று டாம்ப்கால் நிறுவனத்தில் இருந்து சொல்லி அனுப்பினார்கள் என்று கூறினால் போதும் அவர்கள் கேட்கும் மருந்துகளை கொடுத்து அனுப்பி விடுகின்றனர். பின்னர் பரிந்துரை செய்தவருக்கு 15 முதல் 20 சதவீதம் வரை சேர வேண்டிய கமிஷனை கொடுத்து விடுகின்றனர் என்று புகார் கூறப்படுகிறது.

இப்படி தான் கடந்த 4 மாதங்களாக நடக்கிறது. சாதாரண நாட்களிலேயே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை ஆகும். இந்த நிறுவனத்தில் தற்போது கூடுதலாக விற்பனை ஆகும் நிலையில் இந்த மருந்து விற்பனை நிலையம் மூடியே கிடக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மருந்து வாங்க வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த மருந்து விற்பனை நிலையத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

எப்போது திறக்கும்
டாம்ப்கால் மருந்து விற்பனை நிலையம் மூடியிருப்பது குறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டபோது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமானதையடுத்து ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்பதால் மருந்து விற்பனை நிலையத்தை திறக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர். அதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மூடியே தான் கிடக்கிறது. இப்போது திறக்க வாய்ப்பில்லை, எப்போது திறக்கும் என்று எங்களுக்கு தெரியாது என்றனர்.

Tags : Tombcall ,drugstore ,Kapasurakkudinir ,Nilavempu , Kapasurakkudinir, Nilavempu kasayam, Government Tombcall Drug Store
× RELATED புதுக்கோட்டை ‘டாம்ப்கால்”...