×

அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் கூட்டணி வைத்து ரூ2.5 கோடி சுருட்டல்; அரசு கட்டிய வீடுகள் காணோம்: வடிவேலு பாணியில் 22 பேர் போலீசில் பரபரப்பு புகார்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் ஊராட்சியில் கடந்த 2017-2019ம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் மற்றும் மத்திய அரசின் கழிவறை கட்டும் திட்டத்தில் கழிவறைகள் கட்டப்பட்டது. அப்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் தனிஅலுவலர்கள் மூலம் இப்பணிகள் நடந்தது. இதில் 225 வீடுகள், 275 கழிவறைகள் கட்டப்பட்டதாக ஊராட்சி அலுவலக ரெகார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 85 வீடுகள், கழிவறைகள் மட்டும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 140 வீடுகள், 215 கழிவறைகள் கட்டப்பட வில்லை.

சில பயனாளிகள் பெயரில் போலி ஆவணம் தயார் செய்து வீடு மற்றும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக கணக்கு காட்டி ரூ.2.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக வீடு பெறப்பட்டதாக கூறப்பட்ட பயனாளிகள் ஆறுமுகம், இளவரசி, லட்சுமி, சேகர் உள்ளிட்ட 22 நபர்கள் நேற்றுமுன்தினம் தலையாமங்கலம் காவல் நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர். அந்த மனுவில், ‘எனது பெயரில், எனது பட்டா நிலத்தில் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டப்பட்டுள்ளதாக அரசு பதிவேட்டில் பதிவாகியுள்ளது. ஆனால், அப்படி கட்டப்பட்டதாக கூறப்படும் இடத்தில் வீட்டை காணவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. ஒரு படத்தில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிப்பார். அதேபோல் வீடுகளை காணவில்லை என மக்கள் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதிமுக ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, காங்கிரஸ் பிரமுகர் பிரபாகரன் கூறுகையில், ‘போலி ஆவணங்களை உருவாக்கி, பல்வேறு நபர்களின் கணக்கில் வரவு வைத்து அதன் மூலம் ரூ.2.50 கோடி மோசடி செய்துள்ளனர். இது குறித்து கலெக்டர் முதல் முதல்வரின் தனிபிரிவு வரை புகார் அளித்துள்ளோம்’ என்றனர்.

சிறப்பு குழு விசாரணை தொடங்கியது
தலையாமங்கலம் ஊராட்சியில் நடந்துள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின்பேரில், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் பொன்னியின் செல்வன் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்குழு விசாரணை மற்றும் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : party coalition ,Vadivelu ,houses ,government , Officials, ruling coalition, government-built houses, missing, complained
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு