×

பாஜ மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கவர்னர் பதவி?

சென்னை: பாஜ மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் பாஜ இரண்டாம் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது முறை பதவியேற்றதும் பாஜவின் மூத்த தலைவர்களுக்கும், கட்சிக்காக பாடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு கவர்னர் பதவி, கட்சியில் அகில இந்திய அளவில், மாநில அளவிலான பதவிகள், வாரிய தலைவர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி கவுரவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கயிறு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

தமிழக பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலங்கானா கவர்னர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் காலியாக  உள்ள மாநிலங்களவை இடங்களில் முக்கிய தலைவர்களை நியமிக்க பாஜ தலைமை திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசின் வாரிய தலைவர்கள் பதவியை வழங்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக, விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் உள்ளவர்களுக்கு இதே போல வாரிய தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், கட்சியில் தேசிய அளவில் பதவி உள்ளிட்டவைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, தமிழகத்தில் உள்ள பாஜ முன்னணியினருக்கு விரைவில் பல்வேறு பொறுப்பு, பதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், இப்போதைய சூழ்நிலையில் தமிழக பாஜவின் மூத்த தலைவராக இல.கணேசன் இருந்து வருகிறார். 75 வயதை தொட்டுள்ளார். அவரை கவுரப்படுத்தும் வகையில் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, மத்திய பிரதேசம் அல்லது புதுச்சேரி கவர்னராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இல.கணேசன் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பாஜ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags : Ila Ganesan ,BJP ,governor , Ila Ganesan, Governor
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...