×

கொரோனா பணிகளுடன் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: அனைத்து மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுடன் டெங்கு தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் டெங்கு பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆலந்தூரில்  முதல் டெங்கு மரணம் பதிவாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு  சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து  டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள், வீடுகளை சுத்தப்படுத்துவதுடன், தண்ணீரை மூடிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Districts , Corona work, Dengue prevention work, Health
× RELATED தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில்...