×

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மாயமான முதியவரின் மகன் துளசி தாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அதில் கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சில் அழைத்து வந்து விடுவதோடு தங்கள் பணி முடித்துவிட்டாலும், மாயமான முதியவரை காவல்துறையும், தாங்களும் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், கொரோனா நோயாளிகளை கையாள்வதில் சுகாதாரத்துறைக்கும், மாநகராட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு உள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு சுகாதாரத்துறையுடன் முழு ஒருங்கிணைப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கான பதிவேடுகளை தாக்கல் செய்வதாகவும், முதியவரை தேடியது குறித்து விவரங்களை அளிப்பதாகவும் பதிலளித்தனர். இதையடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Corona, record, iCord
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...