×

30 நொடிகளில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனையை இஸ்ரேல் உடன் இணைந்து மேற்கொள்ளும் இந்தியா..!!

ஜெருசலேம்: 30 நொடிகளில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனையை இந்தியா, இஸ்ரேல் உடன் இணைந்து மேற்கொள்கிறது. அதிவிரைவாக கொரோனா தொற்றை கண்டறியும் வழிமுறைகளை உருவாக்கியுள்ள இஸ்ரேல் விஞ்ஞானிகள் அதனை இந்தியாவில் பரிசோதிக்கவுள்ளனர். இதற்காக விஞ்ஞானிகள் உள்ளிட்ட நிபுணர்களை உள்ளடக்கிய குழு தனி விமானத்தில் சில நாட்களில் இந்தியா வரவிருப்பதாக இஸ்ரேல் தூதர் ரான் மால்கா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனைக்காக 4 புதிய தொழில்நுட்பங்கள் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 2 வழிமுறைகள் உமிழ்நீரை அடிப்படையாக கொண்டவை என்றும் இஸ்ரேல் பாதுக்காப்பு ஆராய்ச்சி நிபுணர் குழு தலைவர் டானி ஹோல்ட் கூறினார். உமிழ்நீரை அடிப்படையாக கொண்ட சோதனையில் இரண்டு நிமிடத்தில் கொரோனா இருப்பதை அறியலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மூன்றாவது முறையில் ஒருவரின் குரலை வைத்தே ஒருவருக்கு கொரோனா இருப்பதை அறிய முடியும் என்றும், இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது என்றும் டானி ஹோல்ட் தெரிவித்தார்.

இதில் ஒருவர் தனது செல்போனை பயன்படுத்தி தனக்குத்தானே சோதனை செய்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுதவிர ஒருவரை மூச்சை இழுத்து விட கூறி அதில் ரேடியோ அலைகளை செலுத்துவதன் மூலமும் கொரோனாவை அறிய முடியும் என்று டானி ஹோல்ட் தெரிவித்தார். இந்த நான்கு முறைகளும் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. ஒத்துழைப்புடன் பரிசோதித்து பார்க்கப்படும் என இஸ்ரேல் விஞ்ஞானி கூறினார். சில சோதனைகளில் 30 நொடிகளில் முடிவை அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,Israel ,corona detection test , Israel ,30-second coronavirus test kit, India: All ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...