×

போலி இ-மெயில் மூலம் மோசடி செய்த விவகாரம் : யூ- டியூபர் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை : போலி இ-மெயில் மூலம் மோசடி செய்ததாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகி கொடுத்த புகாரின்பேரில், யூ ட்யூபர் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் மத அடிப்படைப் பிரசாரமும், ஊடகங்களின் மீது அவதூறும் பரப்பி வந்த யூட்யூபர் மாரிதாஸ், அண்மையில் போலி இ- மெயில் ஒன்றை வைத்து தவறான தகவலை பரப்பி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மாரிதாஸ் மீது சென்னை நகர குற்றவியல் போலீசில் தனியார் தொலைக்காட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், தன் மீதும், தனது செய்தி சேனல் மீதும் இட்டுக்கட்டிய செய்திகளை மாரிதாஸ் என்பவர் இ மெயில் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆவணங்களை பொய்யாக புனைவது, பொய்யாக புனையப்பட்ட டிஜிட்டல் ஆவணத்தை உண்மையானது போல காட்டுவது, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலி ஆவணம் தயாரிப்பது மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை தவறாக கையாள்வது தொடர்பான 2 சட்டப் பிரிவின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தனக்கு வந்த இமெயிலையே தான் வெளியிட்டதாகவும் அதனை போலியாக உருவாக்கி அனுப்பியவர்களை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று மாரிதாஸ் கூறியுள்ளார்.


Tags : U-Tuber Maridas ,Maridas , Fake, e-mail, fraud, affair, U-Tuber, Maridas, 5 sections, case
× RELATED தனியார் தொலைக்காட்சி நிறுவனம் புகார்...