×

கால்வாய் வசதி கோரி கழிவுநீரில் குளித்து மக்கள் போராட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல்:  திண்டுக்கல்லில் கால்வாய் வசதி கோரி கழிவுநீரில் குளித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 34வது வார்டு, பர்மா காலனியில் கடந்த 60 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையிலே செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் உபாதை ஏற்பட்டு வந்தது. இதனால் கழிவுநீர் கால்வாய் கட்டி தரக்கோரி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று வீட்டின் முன்பு தேங்கி நின்ற கழிவுநீரில் குளித்து, மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் கழிவுநீர் கால்வாய் கட்டி தர நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதியினர் எச்சரித்துள்ளனர்.


Tags : canal facility ,Dindigul , People bathe ,sewage demanding, facility,stir,Dindigul
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...