×

8 வழிச்சாலை மேல்முறையீட்டை வாபஸ் பெறக்கோரி கை, கால்களை கட்டி கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்: சேலத்தில் பரபரப்பு

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் ரத்தை எதிர்த்து, மத்திய செய்த மேல்முறையீட்டை வாபஸ் பெறக் கோரி, பாதிக்கப்படும் விவசாயிகள் கை, கால்களை கட்டிக்கொண்டு நூதன போராட்டம் நடத்தினர். சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க, ₹10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டத்திலும், சாலை அமைப்பதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். விளை நிலங்கள் அழிக்கப்படுவதற்கு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விசாயிகள், திட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.

அதில், சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கான அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்கவும், சமீபத்தில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து 8 வழிச்சாலை ரத்து மேல்முறையீடு வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேல்முறையீட்டை வாபஸ் பெறக்கோரி, பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் நேற்று, சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் முதல் மஞ்சவாடி வரையிலான 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு, பாதிக்கப்படும் விவசாயிகள் நூதன போராட்டத்தை நடத்தினர். ஒவ்வொரு விவசாயியும் தங்களது வீட்டில் கருப்புக் கொடியை கட்டினர். பின்னர், வீடுகள் முன்பும், விவசாய தோட்டங்களிலும் தங்களது கை, கால்களை கட்டிக்கொண்டும், வாயில் கருப்பு துணி கட்டியும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டை வாபஸ் பெற கோரி போராட்டம் நடத்தினர். ஜருகுமலை பகுதியில் விவசாயிகள் கந்தசாமி, பழனிசாமி உள்ளிட்டோரும், குள்ளம்பட்டியில் முத்து, மணிகண்டனும், ராமலிங்கபுரத்தில் கவிதா, சிவகாமியும், நாழிக்கல்பட்டியில் வெங்கடாசலம், சின்னகவுண்டர், நிலவாரப்பட்டியில் ஜெயவேல், கிருஷ்ணமூர்த்தி, குப்பனூரில் நாராயணன், செவத்தராஜன், மூர்த்தி, அடிமலைப்புதூரில் உண்ணாமலை, அய்யந்துரை, ஆச்சாங்குட்டப்பட்டியில் கனகவல்லி, சண்முகம் உள்ளிட்டோரும் என 161 விவசாயிகள் தங்களின் வீடுகளில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்றால், நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலிலும் விவசாயத்தை அழிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய, மாநில அரசுகள் இருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விளைநிலங்கள் இருந்தால் தான், உணவு கிடைக்கும். அதை முதலில் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து போராடுவோம்,’’ என்றனர்.


Tags : Salem , Farmers protest, hands , feet , withdraw 8-lane appeal, Salem agitation
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...