×

காட்பாடி டெல் நிறுவனத்தை கையிலெடுக்கும் பெல் நிறுவனம் 3 மாதங்களில் ராணுவ வெடிபொருள் உற்பத்தி

* நவீன இயந்திரங்களுக்கு ரூ.50 கோடி முதலீடு
* 300 பேருக்கு வேலைவாய்ப்பு

வேலூர்:  காட்பாடி டெல் தொழில் வெடிமருந்து தொழிற்சாலையை கையில் எடுக்கும் பெல் நிறுவனம் மூன்று மாதங்களில் தனது உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரால் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அப்போது அடையாளம் காணப்பட்ட பழைய வடாற்காடு மாவட்டம் காட்பாடியில் தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் தொடங்கப்பட்டது. நைட்ரோ கிளிசரின், டெட்டனேட்டர், வெடிதிரி, கலரி வெடிமருந்து ஆகியன உற்பத்தி செய்தது. ஆரம்பத்தில் லாபத்தில் நடைபோட்ட இந்நிறுவனம் பின்னர் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு நைட்ரோ கிளிசரின் உற்பத்திக்கு மத்திய அரசு போட்ட தடை முக்கிய காரணமாக அமைந்தது. இதனை தூக்கி நிறுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவ, தொழிற்சாலையை அப்படியே தனியாருக்கு தள்ளிவிட முயற்சிகள் நடந்தன.

அதற்கேற்ப படிப்படியாக விஆர்எஸ் மூலம் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தொழிற்சாலையும் மூடுவிழா கண்டது. இந்நிலையில் இந்நிறுவனத்தை அப்படியே கையில் எடுத்து நடத்த மத்திய பாதுகாப்புத்துறையின் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பெல்) முன்வந்தது. இதற்காக கடந்தாண்டு இந்நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் பலமுறை காட்பாடி டெல் வளாகத்தை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், தற்போது டெல் அமைந்துள்ள நிலத்தை மதிப்பீடு செய்யும் பணிகள் முடிந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.தொடர்ந்து அங்குள்ள கட்டிடங்களை மதிப்பிடும் செய்யும் பணிகள் முடிந்தவுடன் முறைப்படி பெல் நிறுவனம் வசம் டெல் நிறுவனம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு ‘டெ’ என்ற எழுத்து மறைந்து ‘பெ’ என்ற எழுத்துடன் பெல் நிறுவனத்தின் கிளையாக இங்கு ராணுவத்தேவைக்கான வெடிபொருள், ஏவுகணைகளில் நிரப்புவதற்கான வெடிபொருள் உற்பத்தி அடுத்த 3 மாதங்களில் தொடங்கும் என்று டெல் அதிகாரிகள் தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் மற்றும் டெல் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) சி.காமராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘பெல் நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களில் டெல் வளாகத்தில் உற்பத்தியை தொடங்கும். நிலம் மதிப்பீடு பணி முடிந்துள்ளது. கட்டிடங்களை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. அது முடிந்ததும் இதர சட்டரீதியான நடவடிக்கைகள் முடிந்துவிடும். அதன் பிறகு ₹50 கோடி முதலீட்டில் இங்கு உற்பத்தியை தொடங்கும். சுமார் 300 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்’ என்றார்.

பெல் அறிமுகம்
1954ம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெல் நிறுவனம் பெங்களூருவில் அமைந்துள்ளது. 9 உற்பத்தி கூடங்களுடன் போர் விமானங்களுக்கு தேவையான உபகரணங்கள், ரேடார் சாதனங்கள், ஆயுத தளவாடங்கள், எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை உற்பத்தி செய்கிறது. மொத்த வருவாய் ₹12,921.11 கோடி. இயக்க வருவாய் ₹2,479.17 கோடி. நிகர வருவாய் ₹1,793.83 கோடி. தொழிலாளர்கள் எண்ணிக்கை 9,612.

Tags : Katpadi Dell ,Bell , Bell acquires, Katpadi Dell,manufacture military ammunition, 3 months
× RELATED திருச்சி பெல் நிறுவன ஓய்வு பெற்ற...