×

நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!!!

சென்னை:  நாடு முழுவதும் இடைத்தேர்தல்களை எப்போது நடத்துவது என்பது பற்றி தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்கள், இதுவரை நடைபெறாமல் இருக்கின்றன. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்கள் இணைந்து, நாடு முழுவதும் எப்போது இடைத்தேர்தலை நடத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது உள்ள சூழலில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கொண்டே இருப்பதால் நாடு முழுவதும் இடைத்தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.

அதனால், வருகின்ற செப்டெம்பர் மாதம் 7ம் தேதி வரை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால்,  கொரோனாவின் தாக்கம் செப்டம்பர் 7ம் தேதிக்கு பிறகு குறைய வாய்ப்பிருப்பதால், அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே பல மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், இடைத்தேர்தலை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனை கூட்டம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பல தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.  நாடு முழுவதும் சுமார் 56 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாமல் உள்ளன. மேலும், ஒரு மக்களவை தொகுதியிலும் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்த கே.பி. சாமி என்பவர் காலமாகிவிட்டார். இதனால், இந்த தொகுதியிலும் தேர்தல் நடைபெறவேண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், குடியாத்தம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.கார்த்திகேயன் என்பவரும் பிப்ரவரி 28ம் தேதி மரணமடைந்தார். இதனால், அந்த தொகுதியிலும் தேர்தல் நடைபெறவேண்டியுள்ளது. ஆகவே தமிழகத்தில் மொத்தம் 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில்தான் நாடு முழுவதும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதாவது நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனை கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது.

ஆலோசனை கூட்டமானது முடிவுற்ற பின்னரே, தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி அறிவிக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தெந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்கான முடிவும் ஆலோசனைக்கு பின்னர்தான் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய செய்தித்தொடர்பாளர் ஷெஃபாலி சரண் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலானது பெரும்பாலும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில்தான் நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : constituencies ,Election Commission ,country , Election Commission ,by-elections ,
× RELATED பீகார் தேர்தலுடன் சேர்த்து 65...