×

ஏக்கல்நத்தம் கிராமத்தில் செங்குத்தான தடத்தில் அமைக்கப்படும் சாலை: பொதுமக்கள் அதிர்ச்சி

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி அருகே ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு, அப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக, தேர்தல் புறக்கணிப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், சாலை அமைக்க  அரசு நிதி ஒதுக்கி, பணிகளை துவக்கியது. இந்நிலையில், பல இடங்களில் செங்குத்தான இடங்களில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்கள் கூட, ஒருவர் தள்ளினால் தான் மேலே ஏற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், சாலை அமைத்தும் பயனில்லாத நிலை ஏற்படும். செங்குத்தாக உள்ள இடங்களை சமன் செய்த பின்னர், சாலை அமைக்க வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

 ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில், அடிப்படை வசதியின்றி தவித்து வருகிறோம். சாலை வசதி இல்லாதால் போக்குவரத்துக்கு வழியின்றி அரை நூற்றாண்டு காலமாக பரிதவித்து வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதன் பயனாக, தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், பல்வேறு இடங்களில் செங்குத்தான பகுதியில் சாலை அமைத்து வருகின்றனர். சமவெளி பகுதிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பும்போது செங்குத்தான மலை குன்றுகள், முகடுகளில் ஏறி -இறங்கி சளைத்து போய் விட்டோம். இதனால், சமவெளிக்கு சென்று திரும்பவே பெண்கள், குழந்தைகள் பீதிக்குள்ளாகும் நிலை உள்ளது. இந்நிலையில், செங்குத்தான இடங்களில் சாலை பணி நடைபெற்று வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே, இதனை சமன்படுத்தி சீர்செய்து சாலை அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிகை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : village ,Road ,track , Road ,steep track, Ekkalnatham village,Public shock
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி பலி