×

மேட்டூர் அணை திறந்து ஒரு மாதத்தை கடந்தும் கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரவில்லை: குறுவை சாகுபடி இலக்கை அடையுமா? விவசாயிகள் கவலை

வலங்கைமான்: டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதங்களை கடந்தும் முறையாக தண்ணீர் பாசனத்திற்கு வராத நிலையில் முறைப்பாசனம் அறிவிப்பால் குறுவை சாகுபடி இலக்கை அடையுமா என விவசாயிகள் கவலை அடைந்துள்னர். நடப்பாண்டு கடந்த ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு மேட்டூர்அணை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 16ம் தேதி கல்லணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் காவிரியின் கிளை நதிகளில் ஒன்றான குடமுருட்டி ஆற்றில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதிமுதல் கடந்த 12ம் தேதி வரை பாசனத்திற்கு தொடர்ந்து ஒரு மாதம் தண்ணீர் வந்தபோது குடமுருட்டி ஆற்றின் கிளை வாய்க்கால்களான நல்லூர் வாய்க்கால், ஆவூர் வாய்க்கால், கோவிந்தகுடி வாய்க்கால், பூண்டி வாய்க்கால், சந்தன வாய்க்கால், குப்பசமுதிரம் வாய்க்கால், கீழவிடையல் வாய்க்கால், மற்றும் கருப்பூர் வாய்க்கால் ஆகிய தலைப்பு வாய்க்கால்களில் கூட போதுமானதாக தண்ணீர் வரவில்லை.

குறிப்பாக வலங்கைமான், ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் முன்னூறு ஹெக்டேர் பாசனம் பெறக்கூடிய சந்தன வாய்க்காலில் விருப்பாட்சிபுரம் பகுதியை தாண்டி தண்ணீர் செல்லவில்லை. அதன் காரணமாக சந்தனவாய்க்காலின் கிளை வாய்க்கால்களான பாதிரிபுரம் வாய்க்காலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இந்நிலையில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை கருத்தில்கொண்டு கடந்த 13ம் தேதி முதல் ஆறுநாள் முறைப்பாசனத்தை பொதுப்பணித்துறை அறிவித்தது.

அதில் காவிரி கோட்டத்திற்கு ஆறு நாள் மற்றும் வெண்ணாறு கோட்டத்திற்கு ஆறுநாள் என்ற முறையில் முறைப்பாசனத்தை அறிவித்தது. டெல்டா மாவட்டங்களின் ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றாலும் தலைப்பு வாய்க்கால்களில் போதிய தண்ணீர் பாசனத்திற்கு வருவதில்லை. அதற்கு முக்கிய காரணமாக ஆறுகளில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டதால் ஆறுகள் பள்ளமானது. மேலும் பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாரததால் பாசன வாய்க்கால்கள் மேடாக உள்ளது. இதன் காரணமாக பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் பாசனத்திற்கு வருவதில்லை. இக்குறைகளை களைய பாசனத்திற்கு கூடுதல் அளவு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து கேட்டு பெற்று டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தொடர்ந்து முறைவைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்தும் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் வராத நிலையில் முறைப்பாசனம் அறிவித்திருப்பது குறுவை சாகுபடி மேற்கொள்ள உள்ள விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கை அடையுமா என சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

Tags : opening ,Mettur Dam , One month ,opening ,Mettur Dam, no water,cultivation , Farmers,concerned
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி