×

கொரோனா ஊரடங்கால் வெற்றிலையை பறிக்க முடியாமல் செடியிலே விடும் அவலம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம்:  கொரோனா ஊரடங்கால் பெரியகுளம் பகுதியில் வெற்றிலையை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் செடியிலே விடுவதால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருவதுடன், நோய் தாக்குதலாலும் வெற்றிலை விவசாயம் பாதிப்படைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள வடுகபட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் மருத்துவ குணம் கொண்ட வெற்றிலை விவசாயம் மேற்கொண்டுள்ளனர். வெற்றிலை விவசாயம் நடவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு வருவாயை கொடுக்க கூடிய விவசாயம் என்பதால் இப்பகுதியில் தொடர் வெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலை தமிழகத்தின் சென்னை, திருச்சி, கோவை மற்றும் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக வெற்றிலையை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் வெற்றிலையை பறிக்க முடியாமல் செடியிலே விடப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்தும் வெற்றிலையை பறிக்காமல் செடியிலே விடுவதால் கொடிகள் அனைத்து மடிந்து வருகின்றன. மேலும் நோய் தாக்குதலாலும் வெற்றிலை விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு நிவாரணம் வழங்கி காத்திட வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam ,area , Farmers ,Periyakulam ,area, worried
× RELATED நாங்குநேரி பெரியகுளம் மடை சீரமைப்பு...