×

சுதந்திர தின விழாவில் கொரோனா முன்கள பணியாளர்களை அழைத்து கௌரவிக்கலாம் : வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!!

டெல்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் ஆகஸ்ட்15ம் தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இந்த காலக்கட்டத்தில் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை வழிக்காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்டவை வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி,  சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் இணையத்தில் நேரலை செய்யப்படும்.

*டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்வில் ராணுவம் மற்றும் டெல்லி காவல்துறையின் அணிவகுப்பு நடைபெறும். 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதமர் உரையாற்றுவார். அதன்பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும்.

*காலை 9 மணியளவில் மாநிலத் தலைநகரில் முதல்வர் கொடியேற்றுவார். காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெறும்.

*அதேபோன்று, மாவட்ட அளவில் அமைச்சர், ஆணையர், மாஜிஸ்திரேட் இவர்களில் யாரேனும் ஒருவரின் தலைமையில் விழா நடைபெறும். மாவட்ட அளவிலான காவல்துறை, என்.சி.சி மாணவர்கள் அணிவகுப்பு என வழக்கம்போல நிகழ்வுகள் நடைபெறும்.

பொதுவான விதிமுறைகள்

*நாட்டில் மாநிலங்கள், மாவட்டங்கள், யூனியன் பிரதேசங்கள், பஞ்சாயத்துகள் என விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

*விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.

*கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோரை விழாவுக்கு அழைத்து கௌரவிக்கலாம். அதேபோன்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிலரையும் அழைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : frontline staff ,Corona ,Independence Day ,Independence Day: Federal Government ,frontline employees ,Government , Independence Day Celebration, Corona, Forward Staff, Honor, Federal Government, Instructions, Release
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?