×

சச்சின் பைலட் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தடை; ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவால் முதல்வர் அசோக் கெலாட் ஏமாற்றம்!!

புதுடெல்லி: சச்சின் பைலட் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மீது ராஜஸ்தான் பேரவைத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சபாநாயகர் அனுப்பிய பதவி பறிப்பு நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏ.க்களும் தொடர்ந்துள்ள வழக்கில், இன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சச்சின் பைலட், 18 எம்எல்ஏ.க்கள் பதவி பறிப்பு வழக்கு

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும், கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கொறடா உத்தரவை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில், கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி இவர்களின் பதவியை பறிப்பது தொடர்பாக கடந்த வாரம் சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு எதிராக பைலட் உட்பட 19 எம்எல்ஏ.க்களும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், பைலட் உட்பட 19 பேரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டது. இந்த தடையை இன்று வரை நீட்டித்து, இருதினங்களுக்கு முன் புதிய உத்தரவும் பிறப்பித்தது. மேலும், பைலட் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப் போவதாகவும் அறிவித்தது.

 19 அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை!!

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரஜித் மகந்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சச்சின் பைலட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், இந்த விவகாரம் என்பது அரசியல் அமைப்பு சார்ந்தது என்பதால், மத்திய அரசையும் வழக்கில் மனுதாரராக இணைக்க வேண்டும். அப்போது தான் இந்த விவகாரத்தில் தெளிவான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி உத்தரவில், இந்த வழக்கில் மத்திய அரசையும் மனுதாரராக இணைக்கப்படுகிறது. அதுதொடர்பான மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும் இதுதொடர்பாக விளக்கமளிக்க சபாநாயக்ருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை தற்போதைய நிலை என்பது தொடர்ந்து நீடிக்கும். அதுவரை சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்பாக மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் முழுவதுமாக கேட்கப்பட்டு பின்னர் தான் இதில் தீர்ப்பு வழங்கப்படும் என்பதால் சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய இடைக்கால நிவாரணமாக அமைந்துள்ளது என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

Tags : Ashok Gelad ,Sachin Pilot ,Rajasthan High Court ,Ashok Kelad , Sachin Pilot, 19, disgruntled, MLAs, disqualification, Rajasthan, High Court, Chief Minister Ashok Kelad, disappointed
× RELATED ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை: ராமதாஸ் கோரிக்கை