×

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை!!!

திருவனந்தபுரம்:  கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனை மீண்டும் விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதேபோல சுங்க அதிகாரிகள் 78 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள தங்கக்கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணை மிகவும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகளால் தங்கராணி ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர். இந்த வழக்கில் முதலாவதாக கைது செய்யப்பட்ட சரீத் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தங்களது தங்கக்கடத்தல் விவரம் அனைத்தும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு தெரியும் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைதொடர்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரி முதன்மை செயலாளர் பதவியிலிருந்தும், ஐ.டி துறை செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தலைமை செயலாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதிகாரி சிவசங்கரன் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். மேலும், இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனை என்.ஐ.ஏ அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது நடந்த விசாரணையில் கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அதிகாரி சிவசங்கரன் கூறியுள்ளார். மேலும், நட்பு அடிப்படையில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோரை மட்டுமே தெரியும், மற்றவர்கள் யார் என்று தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அளித்த வாக்குமூலத்தில் உண்மை இல்லாததால், மேலும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில், மீண்டும் விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனுக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன்படி வருகின்ற திங்களன்று கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சிக்கல் வழுத்திருப்பதால், அவரை கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தங்கக்கடத்தல் வழக்கில் சுங்க அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது. அதாவது சுங்க அதிகாரிகளுக்கு ஸ்வப்னா தொலைபேசி மூலம் பேசி உதவி கோரியுள்ளார். அதாவது, தங்கக்கட்டிகள் விமானநிலையம் வந்தபோது அதிகாரி சிவசங்கரனை தொடர்பு கொண்டும் ஸ்வப்னா உதவி கோரியுள்ளார்.

இதற்கான ஆவணங்கள் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. இதனால் சுங்க அதிகாரிகளும் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், 78 சுங்க அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கேரளாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 42 கண்காணிப்பாளர்கள், 15 பரிசோதகர்கள், 21 சுங்க ஆய்வாளர்கள் ஆவர். மேலும் இந்த இடமாற்றத்தில் சுங்க அதிகாரிகள் சிலருக்கு உடன்பாடு இல்லாததால், அங்கு தொடர் சர்ச்சை நிலவி வருகிறது.

Tags : Sivasankaran ,NIA ,Kerala , NIA officials,IAS officer Sivasankaran , Kerala gold smuggling case
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து