×

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிக்கு செப்டம்பரில் இடைத்தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு செப்டம்பர் வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி மரணம் அடைந்தார். குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி மரணம் அடைந்தார். இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வருற ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா ஊரடங்கு கடந்த 4 மாதங்களாக அமலில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, வருற செப்டம்பர் மாதம் வரை தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணைய சட்டப்படி ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காலத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாது. அப்படியே தேர்தல் நடத்தினாலும் அது மக்களின் ஆரோக்யத்திற்கு இடையூறாக காணப்படும். ஊரடங்கு தொடர்ந்து இருப்பதாலும், நோய் கட்டுப்பாட்டு மையங்கள் அதிகமாக இருப்பதாலும் தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. சில மாநிலங்களில் மழை, வெள்ளம் காணப்படுறது. அங்குள்ள மாவட்ட நிர்வாகம் வெள்ள தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் நலன்கருதி வருற செப்டம்பர் 7ம் தேதி வரை இடைத்தேர்தல் பற்றி எந்த முடிவும் அறிவிக்க முடியாது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறையிடம் ஆலோசனை நடத்தியுள்ளதுடன், பிரச்னை குறித்து விவாதித்துள்ளது. அதனால் பீகார் 1, அசாம் 1, தமிழ்நாடு 2, மத்திய பிரதேசம் 1, உத்தரபிரதேசம் 2, கேரள 1 ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த ஜூன் 10ம் தேதி கொரோனா தொற்றால் மரணம் இடைந்தார். பொதுத்தேர்தல் நடைபெற ஒரு ஆண்டு கூட இல்லாத நிலையில் அவர் மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. அதேபோன்று, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிக்கும் இனி பொதுத்தேர்தல் வரை இடைத்தேர்தல் நடைபெறாது என்றே கூறப்படுறது.

* மேலும் 5 தொகுதிக்கும் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகளை போலவே, பீகாரில் வால்மீகி நகர் மக்களவை தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் 2 சட்டப்பேரவை தொகுதி, அசாம், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிகளும் உறுப்பினர்கள் இறந்ததால் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளன. இவற்றுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த 8 தொகுதிகளை தவிர, காலியாக உள்ள மற்ற 49 சட்டப்பேரவை தொகுதிகளில் செப்டம்பர் 7ம் தேதிக்கு பின்னர் இடைத்தேர்தல் நடத்துவது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

Tags : constituencies ,by-elections ,Tamil Nadu: Election Commission ,Tiruvottiyur ,Gudiyatham , In Tamil Nadu, Galle, Tiruvottiyur, Gudiyatham constituency, September, no by-election, Election Commission
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...