×

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க 16 நிறுவனங்களுடன் ரூ.5,137 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் எடப்பாடி முன்னிலையில் நடைபெற்றது

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க 16 தொழில் நிறுவனங்களுடன் ரூ.5,137 கோடி முதலீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொழில் துறை சார்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 16 தொழில் நிறுவனங்கள் 5,137 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் 16 புதிய தொழில் திட்டங்களை துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்கள் மூலம், 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சுமார் 6,555 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த 16 திட்டங்களில், 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்களின் விவரங்கள்: செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் வல்லம் வடகால் தொழிற்பூங்காவில் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 320 கோடி ரூபாய் முதலீட்டில் போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும் திட்டம், திருநெல்வேலி மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 100 கோடி ரூபாய் முதலீட்டு திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் சேமியா உற்பத்தி தொழிற்சாலை, செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம்,

காஞ்சிபுரம் அல்லது செய்யார் பகுதியில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி செய்யும் திட்டம், 150 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார பைக்குகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்,
அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தொழில் முனைவோர் சங்கத்தின் 7 தொழில் நுட்ப திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என மொத்தம், 16 திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் www.investingintamilnadu.com என்ற புதிய இணையதளத்தினை துவக்கி வைத்தார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : companies ,businesses ,Edappadi ,Tamil Nadu ,CM Edappadi , In Tamil Nadu, 16 companies, 16 companies, invested Rs 5,137 crore, signed contracts, Chief Minister Edappadi, presence
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!