×

தங்கம் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்.ஐ.ஏ 5 மணி நேரம் விசாரணை: கைதாவாரா?

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்குமார், சொப்னா மற்றும் சந்தீப் நாயரிடம் நடத்திய விசாரணையில் என்.ஐ.ஏ.வுக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கும்பலுடன் தொடர்புடையதாக கருதப்படும் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரிடம் சுங்க இலாகாவினர் மாலை 4 மணி முதல் 9 மணி வரை 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதில் தங்கம் கடத்தல் தொடர்பாக முக்கிய விவரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அமைச்சரகளின் உதவியாளர்கள் பலரும் சொப்னாவுடன் நெருக்கமாக பழகியுள்ளனர். அவர்கள் அடிக்கடி சிவசங்கரனையும் சந்தித்ததாக கூறப்படுகிறது. இது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தினர். சுங்க இலாகாவினரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு சிவசங்கர் சரியான பதில் கூறமுடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் சுங்க இலாகா மீண்டும் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கத்துறை வழக்கு:
இதற்கிடையில், தங்கராணி சொப்னா, சரித்குமார், சந்தீப்நாயர் உள்பட அனைவருக்கு எதிராகவும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இவர்கள் மீது காபிபோசா சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 3வது நபரான பைசல் பரீத்தை துபாய் போலீசார் கைது செய்துள்ளதாகவும் விரைவில் அவர் இந்தியா கொண்டு வரப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே திருச்சூர் கைப்பமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் என்ஐஏ கைது வாரண்ட் நோட்டீசை ஒட்டியது. இந்த வீட்டில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக யாரும் இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தி சில ஆவணங்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருவர் கைது: தங்கம் கடத்தல் வழக்கில் கைதான மலப்புரத்தை சேர்ந்த செய்யது அலவியிடம் நடந்த விசாரணையில், மஞ்சேரியை சேர்ந்த ஹம்ஸத் அப்துல் சலாமுக்கு (57) தொடர்பு இருப்பது தெரியவந்தது. தங்கம் வாங்குவதற்காக இந்த கும்பலிடம் ரூ.20 லட்சம் பணம் கொடுத்திருந்தார். இதற்கு முன்பும் இதேபோல் அவர் பலமுறை கடத்தல் தங்கம் வாங்கியுள்ளார் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதன்படி அவரை நேற்று சுங்க இலாகாவினர் கைது செய்தனர். இதையடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Sivasankar ,NIA ,IAS , Gold smuggling, case, IAS officer Sivasankar, NIA, 5 hours, investigation, arrest?
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை