×

ஆவடி மாநகராட்சியில் பெண் மேலாளருக்கு கொரோனா தொற்று

ஆவடி: ஆவடி மாநகராட்சி தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு நேற்று இரவு வரை 1547பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 842பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 59பேர் மருத்துவமனைகளிலும், 145பேர் வீடுகளிலும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இது வரை தொற்றுக்கு 51பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், கடந்த 4 மாதமாக ஆவடி மாநகராட்சியில் தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் பெண் மேலாளர் பணியாற்றி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது கணவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பெண் மேலாளரும் தொற்று பரிசோதனைக்கு, தன்னை உட்படுத்தி கொண்டார்.

அவருக்கு தொற்று இருப்பது நேற்று காலை தெரியவந்தது. இதனையடுத்து, அவர் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து, அவருடன் அலுவலகத்தில் தொடர்பில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு தொற்று பரிசோதனை செய்ய சுகாதார துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஆவடி மாநகராட்சியில், ஏற்கனவே சுகாதார ஆய்வாளர் உள்பட 5 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் (47) என்பவர் தொற்றால் சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு பலியானது குறிப்பிடத்தக்கது.


Tags : manager ,Avadi Corporation ,Corona , Avadi Corporation, to female manager, Corona
× RELATED சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு