×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்கு அனுமதிக்கப்பட்ட பெண் கொரோனாவுக்கு பலி:உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், வயிற்று வலிக்கு அனுமுதிக்கப்பட்ட பெண், கொரோனாவால் இறந்து விட்டதாக கூறி சடலத்தை தர மருந்துவமனை நிர்வாகம் மறுத்தது. இதனை கண்டித்து, உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தேவகி (60). கடந்த 7ம் தேதி தேவகி, வயிற்று வலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைதொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம், தேவகி கொரோனா பாதிப்பால் இறந்து விட்டதாக கூறினர்.

இதைகேட்ட தேவகியின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று வரை, கொரோனா தொற்று உள்ளதாக எங்களிடம் கூறவில்லை. நாங்கள் தேவகிக்கு உதவிக்காக மருத்துவமனையில் அவருடன் தங்கினோம். அப்போது கூறாமல், இறந்த பிறகு கொரோனா பாதிப்பால் இறந்ததாக பொய்யான தகவலை தருகிறீர்கள் என கூறினர். மேலும், தேவகிக்கு கொரோனா தொற்று இருந்தால், அதற்கு ஆதாரமான சான்றிதழை தர வேண்டும். தேவகிக்கு கொரோனா இருந்திருந்தால், அவருடன் மருத்துவமனையில் தங்குவதற்கு எங்களை எப்படி அனுமதித்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர், தேவகி கொரோனா தொற்றால் இறக்கவில்லை. சடலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி, உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வார்டு  கட்டிடம் முன்பு முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, செஞ்சியில் இருந்து சுகாதார ஆய்வாளர் வந்த பிறகு, உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் நேற்று மாலை 3 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மஞ்சள்காமாலை நோய்க்காக, கடந்த 4 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட சிங்கபெருமாள் கோயிலை சேர்ந்த ஏழுமலை (40) என்பவர் நேற்று காலை இறந்தார். அதன் பிறகு அவர் கொரோனாவால் இறந்ததாக கூறியுள்ளனர். இதனால், ஏழுமலை உறவினர்களும் முற்றுகையில் ஈடுபட்டனர்.


Tags : siege ,Chengalpattu Government Hospital ,relatives , Chengalpattu, Government Hospital, Abdominal Pain, Woman, Corona, Kills, Relatives Siege
× RELATED 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து...