×

திருப்பதியில் தொற்று உறுதியான 236 பேர் ஓட்டம்: போலீசார் வலை

திருமலை: ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 6,045 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 64,713 பேர் பாதித்துள்ளனர். சித்தூர் மாவட்டம், திருப்பதி மாநகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 2,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் திருப்பதி பகுதியில் பரிசோதனை செய்து கொண்டவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட 236 பேர் மாயமாகி விட்டனர். எங்கு உள்ளார்கள் என்று தெரியவில்லை.

பரிசோதனையின் போது இவர்கள் வழங்கிய செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. பலர் போன் செய்தால் எடுப்பதில்லை. அவர்கள் வழங்கிய முகவரியும் தவறாக உள்ளது. இதனால், அதிகாரிகள் செய்வது அறியாமல் உள்ளனர். இந்த 236 பேரில் 66 பேர் பெண்கள். அனைவரும் 12 வயது முதல் 60 வயதுடையவர்கள். ஆண்களில் 18 வயது முதல் 99 வயது முதியவர் வரை உள்ளனர். இவர்களை கண்டுபிடித்து தரும்தபடி, போலீசில் சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத்குப்தா புகார் அளித்துள்ளார். நோய் பாதித்த இவர்களால் ஏராளமானவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தூர் மட்டுமின்றி, ஆந்திராவின் மற்ற மாவட்டங்களில் இதுபோல் தொற்று உறுதியானவர்கள் மாயமாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

*  தெலங்கானாவில் 2000 பேர்
ஆந்திராவில் மட்டுமின்றி, அண்டை மாநிலமான தெலங்கானாவிலும் தொற்று உறுதியான 2.000 பேர், தவறான முகவரி மற்றும் செல்போன் எண் கொடுத்து விட்டு தலைமறைவாக இருப்பதாக அம்மாநில அரசு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tirupati , Tirupati, infection, 236 people, flow, police web
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...