×

குவைத்தில் சிக்கியுள்ள 2 ஆயிரம் தமிழர்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: குவைத்தில் சிக்கியிருக்கும் தமிழகர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால், வெளிநாடுகளுக்கு வேலைக்காகவும், படிக்கவும் சென்ற மக்கள், அந்தந்த நாடுகளில் சிக்கிக் கொண்டனர். சிறப்பு விமானங்கள் மூலம் அவர் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதேபோல், ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் இந்தியாவும் சிறப்பு விமானங்களை இயக்கி, இந்தியர்களை அழைத்து வருகிறது.

இதுவரை 4 கட்டமாக விமானங்கள் இயக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இருப்பினும், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் இப்போதும் சிக்கியுள்ளனர். குறிப்பாக, தமிழர்கள் அதிகளவில் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா காரணமாக குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘வேலைக்காக சென்று குவைத்தில் சிக்கியுள்ள 2 ஆயிரம் தமிழக தொழிலாளர்களை மீட்டு கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, தங்குமிடம், மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும்படி அங்குள்ள இந்திய தூதரகத்துக்கும் உத்தரவிட வேண்டும்,’ என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து, “குவைத் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Tamils ,Supreme Court ,Kuwait ,Central Government , Kuwait, 2 thousand, Tamil, recover, Central Government, Supreme Court, Notice
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...