×

கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி உரை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது: மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால், அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியாகத் தான் இருக்கும். இது மாதிரியான கொலை பாதக ஆட்சியை இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை. இனியும் பார்க்கவும் முடியாது. கொரோனா நோய்த் தோற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 144 ஆகிவிட்டது. நேற்று வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசாங்கம் கூறியது. ஆனால் ஒரே நாளில் எப்படி 3 ஆயிரத்து 144 எப்படி ஆனது?.

இதுவரையில் மறைத்து வைத்த மரணங்களை இனியும் மறைக்க முடியாமல் வெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரையில் இறந்தவர் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டது. அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? மார்ச் 1ம் தேதியிலிருந்து இன்றைக்கு வரைக்கும் தினமும் பொய் சொல்லி கொண்டு வந்திருக்கிறார்கள். அதுதான் உண்மை.
மரணத்தை இந்த அரசாங்கம் மறைக்கிறது என்று ஜூன் 15ம் தேதி அன்றைக்கே நான் சொன்னேன்.

கொரோனாவால் இறந்தவர் மரணம் மறைக்கப்படுகிறது என்று ஊடகங்கள் ஜூன் முதல் வாரமே மெல்ல எழுத ஆரம்பித்தன. இதற்கு உரிய விளக்கத்தை அரசாங்கம் சொல்ல வேண்டும் என்று நானும் கேட்டேன். நான் அரசியல் செய்கிறேன் என்று சொல்லி, பதில் சொல்ல மறுத்தார்கள். சென்னையில் மொத்தம் 460 பேர் இறந்ததாக ஜூன் 9ம் தேதி சென்னை மாநகராட்சி கூறியது. ஆனால் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை 224 பேர் தான் இதுவரை சென்னையில் இறந்ததாக சொன்னது. அப்படி என்றால் மரணம் அடைந்த 236 பேர் யார்?அவர்கள் என்ன நோயால் இறந்தார்கள் என்று நான் கேட்டேன். மக்கள் நல்வாழ்வுத் துறையும், சென்னை மாநகராட்சியும் தமிழக அரசாங்கத்தின் இரண்டு பிரிவுகள்தான். அவர்களே இரண்டு விதமாகச் சொன்னார்கள். இதைவிட கேவலம் என்ன இருக்க முடியும்? 236 பேரின் மரணத்தை நடைமுறை பிரச்சனைதான் என்று அந்த அதிகாரி சொன்னார்.

இதைப்பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, ‘இறப்பு தகவலை மறைக்க முடியாது என்று மகாயோக்கியரைப் போலச் சொன்னார். ஆனால், இந்த விவகாரம் மத்திய அரசு வரையில் சென்று, அங்கிருந்து விசாரணை நடத்தியதாக சொன்னார்கள். அதனால் இதுபற்றி விசாரணைக் குழு அமைப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சொன்னார். அப்படி சொன்னதற்காகவே அவரைப் பணியிடமாற்றம் செய்தார் முதலமைச்சர். பீலா ராஜேஷ் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக இருந்த வரையில், 236 மரணங்கள் மட்டுமே மறைக்கப்பட்டதாகச் சொன்னார்கள். இப்போது ராதாகிருஷ்ணன் வந்தப் பிறகு 444 மரணங்கள் இதுவரை மறைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முதலமைச்சருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்குப் பயந்து கொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர்கள் மறைத்துள்ளார்கள்.

மே 28ம் தேதி இறந்த ஒருவரின் மரணம் ஜூன் 7ம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வருகிறது. மே 24ம் தேதியில் இருந்து ஜூன் 7ம் தேதிவரை மரணமடைந்த ஏழு பேரின் மரணங்கள் ஜூன் 15ம் தேதி செய்திக்குறிப்பில் வருகிறது. மார்ச் 1ம் தேதியிலிருந்து ஜூன் 10ம் தேதிவரை மரணமடைந்த 444 பேரின் மரணங்கள் ஜூலை 22ம் தேதி செய்திக்குறிப்பில் வருகிறது என்றால், இதுதான் அரசாங்கம் நடத்தும் லட்சணமா என்று கேட்கிறேன். ‘தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை. கொரோனா உயிரிழப்பு விவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை’ என்று முதலமைச்சர் பழனிசாமி சொன்னது பொய் என்று இப்போது அரசாங்க அறிக்கையே மெய்ப்பித்து விட்டது. அப்பாவி மக்களின் மரணத்தை மறைத்த பழனிசாமி, மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கொரோனா பரவ தொடங்கியது முதல் இன்றுவரை இறந்தோர் பட்டியலை தேதி வாரியாக - மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும். கொரோனா மரணங்களில் மர்மம் உள்ளது என்பது குறித்து நான் சொன்னபோதெல்லாம் அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்று எரிந்து விழுந்தார்கள் தமிழ்நாட்டு அமைச்சர்கள். இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன. இன்னும் இதுபோல் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. கொரோனா மரணத்தைப் போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். ஒரு கொள்ளை நோயை வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொள்ளைக்கூட்டத்தை வைரசைப் போல விரட்டுவதற்குச் சூளுரைப்போம். முதலமைச்சருக்கு,
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்குப் பயந்து கொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறைச்செயலாளர்கள் மறைத்துள்ளார்கள்.

Tags : death ,MK Stalin ,Corona , Corona, death, false account, cruel rule, criticism of MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...