×

பலிகளை மறைப்பது ஆபத்து

தமிழகத்தில் ஜெட்டை விட அதிவேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. சென்னையில் துவங்கிய அதிகபட்ச பாதிப்பு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரையை தொடர்ந்து தற்போது விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் என தமிழகத்தின் 60 சதவீத மாவட்டங்களில் தனது வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளது. இது ஒருபுறமிருக்க கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்து, சுகாதாரத்துறை பட்டியல் வெளியிடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தினகரன் நாளிதழிலும் செய்திகள் வெளியாகின.

மரண மறைப்பை உறுதிப்படுத்தும் வகையில், சென்னையில் கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 10ம் தேதி வரை 444 மரணங்கள் விடுபட்டுள்ளதாக இப்போது தமிழக அரசு தெரிவித்துள்ளது மக்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலும் மூன்றில் ஒரு பங்கு மரணம் மறைக்கப்படுவதாக, மதுரை எம்பி சு.வெங்கடேசனும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார். மதுரை கொரோனா மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களாக தினந்தோறும் 5 முதல் 10 வரை நோயாளிகள் மரணமடைகின்றனர். ஆனால், சுகாதாரத்துறை பட்டியலில் பலியானோர் குறைத்தே காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளான மக்கள் தொகை எண்ணிக்கையில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள சென்னை, மதுரையில் பலி எண்ணிக்கை கூடுவது ஒருபுறம் கவலையளித்தாலும், அடுத்த நிலையில் உள்ள மாவட்டங்களிலும் பலி எண்ணிக்கை உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் பலி மற்றும் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
இதற்கான காரணம் குறித்து மருத்துவ வட்டாரத்தில் விசாரித்தபோது, கொரோனா அறிகுறி உள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு அதிகபட்சமாக ஒரு வாரம் வரை ஆகிறது.

அதுவரை அவர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இவர்களில் சிலரை சிகிச்சை வார்டில் அனுமதிக்கின்றனர். பலரை வீட்டுத்தனிமையில் இருக்கக் கூறுகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் பலர் ஏற்கனவே இதய நோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உபாதைகளை பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கு நோய் பாதிப்பு தீவிரமாகி, உயிரிழந்த பின்னரே பரிசோதனை முடிவுகள் வெளி வருகின்றன. வந்த பின் சிகிச்சை அளித்தவர்கள், உடனிருந்த குடும்பத்தினர், பழகியவர்களை தேடும் படலம் தொடர்கிறது. அதற்குள் கொரோனா வெகுவேகமாக மற்றவர்களுக்கு பரவி விடுகிறது.

மேலும், உறுதியாவதற்கு முன்பே ஒருவர் இறந்து விட்டால், அவர்களை அடக்கம் செய்ய குடும்பத்தினரே அஞ்சும் நிலை உள்ளது. இப்படி இறப்பவர்களை மற்ற நோய் உபாதைகளால் இறந்ததாகவே அரசும் கணக்கு காட்டி வருகிறது.
பலி எண்ணிக்கையை மிகச்சரியாக அரசு தெளிவுபடுத்தினால் மட்டுமே, மக்களுக்கு முகக்கவசம் அணிதல், சமூக விலகலுடன் இருத்தல் உள்ளிட்ட எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கும். டாக்டர்கள், சுகாதாரத்துறையினரை தொடர்ந்து, போலீசார், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனவே, இனியாவது அரசு சுதாரித்துக் கொண்டு, பரிசோதனை முடிவுகளை வேகப்படுத்துவதோடு, பாதிப்பு, பலியானோரின் சரியான பட்டியலை  வெளியிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : protests , dangerous, cover up, sacrifices
× RELATED சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்