×

ஊரடங்கு காலத்தில் இப்படி ஒரு சோகம்; டீ கடை வியாபாரிக்கு ரூ51 கோடி கடன்: அரியானா வங்கியின் குளறுபடியால் அதிர்ச்சி

சண்டிகர்: அரியானாவில் டீக் கடை வியாபாரி ஒருவர் ரூ.51 கோடி அளவிற்கு கடன் பெற்றிருப்பதாக வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்ததால், அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அரியானா மாநிலம் குருக்‌ஷேத்ரா அருகே தர்மனகரி என்ற பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ராஜ்குமார் என்பவர், கடந்த 2015ம் ஆண்டு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி டீ வியாபாரத்தை தொடங்கியுள்ளார். இதில் ரூ.17,119 செலுத்த வேண்டிய பாக்கி உள்ளது. கொரோனா ஊரடங்கால் தொழிலுக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், டீ வியாபாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வர மற்றும் மளிகைக் கடன், பால் வாங்கிய கடன் ஆகியவற்றை அடைக்க அருகிலுள்ள வங்கிக்குச் சென்றார்.

மேலாளரைச் சந்தித்து தனக்கு ரூ.50,000 கடன் கேட்டுள்ளார். அவரது வங்கி விவரங்களைப் பார்த்த மேலாளர், கடன் தர மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தை கேட்ட போது, ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் ஏற்கனவே ரூ.50.76 கோடி கடன் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்தாத நிலையில், புதிதாக கடனை எப்படி தர முடியும் என்று வங்கி மேலாளர் கேட்டுள்ளார். ேமலும், அந்த கணக்கில் மாதந்தோறும் ஏதேனும் ஒரு கடன் பெற்றும், கிசான் கிரெடிட், ஆட்டோ, டிராக்டர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பட்டியலும் உள்ளன. அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

இவருடைய சிபில் ஸ்கோர் மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் வேறெந்த நிதி நிறுவனமும் ராஜ்குமாருக்கு கடன் தர மறுத்துள்ளது. அதனால், தனது பிழைப்பை நடத்த தினமும் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். நிலைமை இவ்வாறு இருக்க, ராஜ்குமார் எப்படி ரூ.51 கோடி அளவிற்கு கடன் பெற்றிருக்க முடியும். தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த எப்படி செலவிட்டார்? டீ வியாபாரத்திற்கு எதற்காக ரூ.51 கோடி கடன் வாங்க வேண்டும்? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. ராஜ்குமாரை பொறுத்தவரை மத்திய அரசு திட்டத்தின் கீழ் சொந்தமாக சிறிய வீடு ஒன்றை மட்டுமே கட்டியுள்ளார்.

அவருக்கு மற்ற வகையில் எந்தவொரு சொத்தும் இல்லை. ரூ.51 கோடி கடன் விவகாரம், தொழில்நுட்ப கோளாறாகத் தான் இருக்க முடியும் என்று  ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை ஆணையர் திரேந்திரா கரக்டா கூறுகையில், ‘டீ வியாபாரி ராஜ்குமாரின் வங்கிக் கடன் தொடர்பாக எந்தவொரு புகாரும் வரவில்லை. இதுபற்றி புகார் அளிக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : curfew ,Haryana Bank , Curfew, Tea Shop Merchant, Credit, Haryana Bank
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்