×

வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு உடனே தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

காட்டுமன்னார்கோவில்:  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக திகழ்கிறது. ஏரியின் முழுகொள்ளளவு 47.50 அடி ஆகும். வழக்கமாக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காவிரி நீர் பங்கீடு பிரச்னை மற்றும் பருவமழை பொழிவு குறைவு போன்ற காரணங்களால் வீராணம் ஏரிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வரவில்லை. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை நெல் சாகுபடி முற்றிலுமாக இல்லாமல் போனதுடன் பல்வேறு பகுதிகளில் சம்பா பாசனமும் விளைச்சல் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானது.

 இந்த ஆண்டு ஜூலை 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான சம்பா மற்றும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் ஏரியில் போதுமான அளவில் இருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 47அடியாக உயர்ந்துள்ளது. நடப்பு குறுவை நெல்சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதுகுறித்து கந்தகுமாரன் பகுதியை சேர்ந்த விவசாயி குமரேசன் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வறட்சி ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் குறுவை சாகுபடியை கைவிட்டு விட்டோம்.

 இந்த ஆண்டு முன்னதாகவே தண்ணீர் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தண்ணீர் திறப்புக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆளுங்கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சம்பிரதாயத்துக்கு நடைபெறும் அரசு விழாவை எதிர்பாராமல் விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு நடப்பு குறுவைக்கும், வரவிருக்கும் சம்பா பயிருக்கும் ஏதுவாக வீராணம் ஏரியை உடனடியாக பாசனத்திற்கு திறக்கவேண்டும் என்றார்.

Tags : Veeranam Lake: Farmers , Veeranam Lake, Irrigation, Water, Farmers
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...