×

75 கோடி மதிப்பிலான சிற்பங்கள் தேக்கம்.!மைலாடியில் 4 மாதமாக நின்றது உளி ஓசை.!! 100க்கும் மேற்பட்ட கூடங்கள் மூடல்

நாகர்கோவில்: கொரோனா காரணமாக மைலாடியில் a75 கோடி மதிப்பிலான கற் சிற்பங்கள் தேங்கியுள்ளன. மயில்கள் ஆடும் பாறை என்பதால், மைலாடி என பெயர் பெற்ற இந்த ஊர் பாறையின் மீதுதான் அமைந்துள்ளது. இதன் அருகே மருந்துவாழ்மலை மற்றும் ஏராளமான குன்றுகள் பெரிய பாறைகள் உள்ளன. இங்குள்ள பாறைகளின் தன்மை சிற்பங்கள் செய்ய உகந்தவை என்பதால், அங்கு சிற்ப தொழில் சிறப்புடன் திகழ்கிறது.
இங்கு வடிக்கும் சிற்பங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அருள் செய்யவும், கலை திறனுக்கு சான்றாகவும் பயணிக்கின்றன. இதனால், மைலாடி தற்போது கற்சிற்ப புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.

 தற்போது மைலாடியில் 200க்கும் மேற்பட்ட கற்சிற்ப கூடங்கள் உள்ளன.  ஒரு சிற்ப கூடத்திற்கு 8 பேர் முதல் 15 பேர் வரை தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். இத்தொழில் மூலம் 4 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றன. உளியின் ஓசை மட்டுமே தாளமாக கேட்டு வந்த நிலையில் இயந்திரங்கள் உதவியுடன் நவீன தொழில் நுட்பமும் இணைந்துள்ளன.  சிறப்பாக செயல்பட்டு வந்த சிற்ப தொழிலுக்கு, குமரியில் பாறைகள் உடைக்க அனுமதி மறுக்கப்பட்டதால், தற்போது கோவில்பட்டி பகுதியில் இருந்து கற்கள் கொண்டு வரப்படுகின்றன. சிற்பங்கள் மட்டுமின்றி, அம்மி, ஆட்டுரல், குளவி கற்கள் போன்ற இதர கற்படைப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று  கற்சிற்ப தொழிலையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 4 மாதங்களாக தொழிற் கூடங்கள் மூடப்பட்டதால், இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் வேலை இழந்தனர். உளியின் ஓசையின்றி மைலாடி அமைதியாக இருக்கிறது.
தற்போது ஊரடங்கு தளர்விற்கு பின்னர் சிற்ப கூடங்கள் திறக்கலாம் என்றாலும், சிற்பங்கள் வெளியூர் கொண்டு செல்லவும், குறிப்பாக கேரளா கொண்டுசெல்ல முடியாத காரணத்தினால், சுமார் 75 கோடி மதிப்பிலான கற் சிற்பங்கள் தேங்கி கிடக்கின்றன.

இதனால், சிற்பங்கள், கோயிலுக்கு தேவையான தூண்கள், வேலைபாடு மிகுந்த கற்கள் என அனைத்தும் படைக்கப்பட்டு இருப்பில் உள்ளன. குறிப்பாக  கேரளாவிற்கு செல்ல வேண்டிய 75 கோடி மதிப்புடைய சிற்பங்கள் மற்றும் கல் படைப்புகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் வருவாய் இன்றி 100க்கும் மேற்பட்ட கூடங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் சிற்ப கலைஞர்கள் வேறு வேலை மற்றும் வெளியூர் செல்ல தொடங்கியுள்ளனர். இதில் கற்களில் மேல் ஓவியம் வரைந்து உருவம் தோற்றுவிக்கும் நுட்ப கலைஞர்கள், நுண்ணிய வேலைபாடுகள் செய்யும் கலைஞர்கள் மீண்டும் கிடைக்க மாட்டார்கள் என்பதால், அந்த கலைஞர்களுக்கு மட்டும் உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் கிடைக்கும் பணி வழங்கும் வகையில் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டும் பல கூடங்கள் திறந்து செயல்படுகின்றன.

மற்றபடி புதியதாக தொழிலுக்கு வந்தவர்கள், முதியவர்களுக்கு ேவலையில்லை. இதற்காக பாதி நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் வழங்கவும் பல கூடங்களின் உரிமையாளர்கள் தங்கள் நகைகளை வங்கியில் அடகு வைத்து  வழங்கி வருகின்றனர். கொரோனாவை காரணம் காட்டி கற்களின் விலையை 3 மடங்கு உயர்த்திவிட்டதால், சிற்ப கூட உரிமையாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குமரியில் கற்கள் கிடைக்க செய்வதுடன், கேரளாவிற்கு சிற்பங்கள் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாறைகளை வெடி வைக்காமல் உடைக்கலாம்
இதுபற்றி மைலாடியை சேர்ந்த சாரதி என்ற சிற்ப கலைஞர் கூறியதாவது: கேரளாவிற்கு அதிக அளவில் சிற்பங்கள் விற்பனையாகும். தற்போது தயாராக உள்ள சிற்பங்னை கொண்டு செல்ல இ பாஸ் கிடைப்பதில்லை. இதுபோல், கற்களின் விலையும் 3 மடங்கு உயர்த்தி கேட்கின்றனர்.  மைலாடியில் ஒன்றரை அடி ஆழத்திலேயே பாறைகள் உள்ளதால், குடிநீர் வடிகால் வாரிய பணிக்காக வெடி வைத்து உடைக்கின்றனர். ஆனால், தற்போது முன்பு போல் பாறைகளை வெடி வைத்து தகர்க்காமல், ரசாயன கலவையை ஊற்றினால், பாறைகள் மறுநாள் அப்படியே பாளம் பாளமாக பெயர்ந்து விடும். இந்த நவீன நுட்பத்தை பயன்படுத்தி குமரியில் கற்கள் எடுக்க அனுமதிக்க வேண்டும். மைலாடி பகுதியில்  மரங்கள் இல்லாத பாறைகள் ஏராளம் உள்ளன. இங்கு  அரசே குவாரி அமைத்து விற்பனை செய்யலாம். கேரளாவிற்கு இ பாஸ் மூலம் சிற்பங்கள் கொண்டு செல்ல அனுமதி கிடைத்தால், சிற்ப தொழிலும் செழிக்கும். இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்க்கையும் வளமடையும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : halls ,Myladi , Corona, mailati
× RELATED பிரமாண்ட புத்தகத் திருவிழா அமைச்சர்...