×

கோயில்கள் திறக்கப்படாததால் எலுமிச்சம் பழ விற்பனை சரிவு: பழங்களை ரோட்டில் வீசிய வியாபாரிகள்

ஈரோடு:   ஈரோடு மாவட்டத்திற்கு எலுமிச்சம் பழம் வரத்து அதிகரித்தும், கோயில்கள் திறக்கப்படாததால் எலுமிச்சம் பழ விற்பனை சரிவடைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் விற்பனையாகாத பழத்தை ரோட்டில் வீசி சென்றனர்.  ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு எலுமிச்சம் பழம் திண்டுக்கல், தென்காசி மாவட்டம், புளியங்குடி போன்ற பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நாட்டு எலுமிச்சம் பழம் ஈரோடு மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகள், சேலம் மாவட்டம் சங்ககிரி போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

மழையின் காரணமாக நடப்பாண்டு அதிகளவில் எலுமிச்சம் பழம் வரத்தாகி வருகிறது. கடந்த ஆண்டு எலுமிச்சம் பழ மூட்டை ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்பனையானது. தற்போது மூட்டை ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சம் பழம் விலை குறைவு ஒரு பக்கம் இருந்தாலும், கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு 50 சதவீதம் குறைந்து விட்டது. இதனால், எலுமிச்சம் பழ வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், விற்பனையாகாமல் இருந்த எலுமிச்சம் பழத்தை வியாபாரிகள் சாலையோரம் அதிகளவில் வீசி சென்றுள்ளனர்.

எலுமிச்சம் பழ வியாபாரி பாலாஜி கூறியதாவது: தென்காசி மாவட்ட எலுமிச்சம் பழம் கிலோ கணக்கிலும், திண்டுக்கல் மாவட்ட பழம் மூட்டை கணக்கில்தான் விவசாயிகள் விற்பனை செய்வர். எலுமிச்சம் பழம் வரத்து கடந்த ஆண்டை விட தற்போது அதிகரித்துள்ளதால், விலையும் சரிவடைந்துள்ளது. இதனால், சில்லரை விலையில் 5 பழம் ரூ.10க்கும், ஒரு பழம் குறைந்தபட்சமாக ரூ.1.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக்காய் விலை மட்டும் எப்போதும் போலவே உள்ளது. எலுமிச்சம் பழம் அதிகளவில் கோயில்களில்தான் பயன்படும்.

கோயில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், எலுமிச்சம் பழத்தின் விற்பனை பாதியாக குறைந்து விட்டது. தினமும் ஆயிரக்கணக்கான எலுமிச்சம் பழம் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. கோயில்கள் திறந்தால் எலுமிச்சம் பழம் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : temples ,Traders ,road , Temples, lemon fruit, sales decline, fruits
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு