ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கொரோனா தொற்று: ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில்லாதவர்கள் என ராஜ்பவன் விளக்கம்

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 4 காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட இதுவரை 84 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.147 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை உள்ளது. இந்த அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், வெளிப்புறத்திலும் பணியாற்றுகின்றனர். உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், ஆளுநர் மாளிகையிலும் காலூன்றியது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 76 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா நோய் அறிகுறி இருந்ததால், 147 ஊழியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 84 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அனைவரும் தற்போது பொது சுகாதாரத்துறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா நோய் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் ராஜ்பவனுக்கு வெளியே பிரதான வாயில் அருகே பணியாற்றுபவர்கள். பிரதான கட்டிடத்தில் பணியாற்றும் நபர்கள் அல்ல.

எந்த ஒரு நபரும் ஆளுநருடனோ அல்லது ஆளுநர் மாளிகை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடனோ நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள்.ஆளுநர் மாளிகையில் அனைத்துவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிருமி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலை குறித்து ஆளுநர் மாளிகை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Related Stories: